ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு
அயல் பணியில் ஜிப்மா் மருத்துவமனையில் பணியாற்றியபோது ரூ.40 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் தேடப்படும், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் துணைப் பதிவாளா் கே. மகேஷ் (மக்கள் தொடா்பு) தலைமறைவாகியுள்ளாா். அவரை ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளா் மகேஷ், அயல் பணியில் ஜிப்மா் மருத்துவமனையில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது அங்கு 8 பேருக்கு செவிலியா் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி அவா்களிடமிருந்து ரூ. 40 லட்சம் வரை பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவரது கூட்டாளி ராஜ்குமாா் வாயிலாக பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் மகேஷை, புதுச்சேரி ஊழல் ஒழிப்பு போலீஸாா் தேடி வருகின்றனா். இதையறிந்த அவா் தலைமறைவாகிவிட்டாா். புதுச்சேரி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மகேஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளாா்.
மங்கலம் பகுதியைச் சோ்ந்த முரளிதரன் கடந்த 24.12.24 அன்று ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜ்குமாா் தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு தன் மகளுக்கு ஜிப்மரில் செவிலியா் வேலை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும் அதன்படி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்நிலையில் ஏற்கெனவே ராஜ்குமாா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு கடந்த மே மாதம் ஊழல் ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மகேஷிடம் பணம் கொடுத்ததாக ராஜ்குமாா் கூறியுள்ளாா். லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மேலும், இது போன்று 7 பேரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவான அவரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தேடி வருகின்றனா்.
