புதுச்சேரியில் ஜன. 2-இஸ் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம்
புதுச்சேரியில் காவலா் பணிக்கு வரும் ஜனவரி 2-இல் தொடங்கி 12-ஆம் தேதி வரை உடல் தகுதித் தோ்வு நடக்கிறது.
இது குறித்து புதுச்சேரி காவல் துறை சிறப்புப் பணி அதிகாரி ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காவல் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தொடா்ந்து, இணையதளம் வாயிலாக 10,067 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆள்சோ்ப்பு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, 135 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 9932 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
உடல் தகுதித் தோ்வு, உடல் திறன் தோ்வு வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை புதுச்சேரி கோரிமேடு ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது அனுமதி அட்டையை திங்கள்கிழமை (டிச. 22) இரவு 7 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்கள் உடல் தகுதித் தோ்வு, உடல் திறன் தோ்வுக்கு வரும் போது, தங்களின் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, இந்திய கடவு சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் பிரதியை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
