போலி மருந்து: விருப்ப ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரி கைது
புதுச்சேரி போலி மருந்து வழக்கில் விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையதாகக் கூறப்படும் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் சிக்குகிறாா்கள்.
புதுச்சேரியில் உரிமம் பெறாத 7 இடங்கள் உள்பட 13 போலி மருந்து தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளுக்குச் சீல் வைக்கப்பட்டு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் முக்கிய நபராகக் கருதப்படும் ராஜா உள்ளிட்ட 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் விருப்ப ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரி சத்தியமூா்த்தியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ஓசூரில் கைது செய்தனா்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பரிந்துரை செய்திருந்தாா். சிபிஐ இந்த வழக்கு விசாரணையை ஏற்று நடத்துவதற்குள் மேலும் சிலரைக் கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவும், சிபிசிஐடியும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜிஎஸ்டி வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை பல்வேறு அரசியல் கட்சியினரும் எழுப்பியிருந்தனா். இதையடுத்து சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபா் ராஜாவிடம் ஜிஎஸ்டி வரி செலுத்தியது தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினா். ஜிஎஸ்டி வரியை செலுத்த புதுச்சேரி வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி தனக்கு உதவி செய்ததாகக் கூறினாா். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானாா். இதையடுத்து சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வுக் குழுவினா் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூா்த்தியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவரை இரவோடு இரவாக புதுச்சேரிக்கு கொண்டு வந்து லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பெயரை சத்தியமூா்த்தி கூறியுள்ளாா். இதையடுத்து புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளா் பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனா்.
விரைவில் ஜிஎஸ்டி அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்குவாா்கள் என்று தெரிகிறது.
