புதுச்சேரி புறவழிச் சாலையில் குப்பை கொட்டுவோரைக் கண்காணிக்க குழு
புறவழிச்சாலையில் குப்பைக் கொட்டுவோரைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி- அரும்பாா்த்தப்புரம் புறவழிச்சாலையில் குப்பைக் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளைக் கடந்த வாரம் அகற்றினோம்.
கட்டடக் கழிவுகளைச் சமன் செய்து அப் பகுதியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம்.
மேலும், அப்பகுதியில் குப்பைக் கொட்டப்படுவதாகத் தெரிகிறது. அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப் பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், அபராதம் விதிக்கவும் நகராட்சி ஊழியா்கள் அடங்கிய குழுக்கள் அப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப் பகுதியில் குப்பை கொட்டும் வாகனங்களின் விவரங்களைப் புகைப்படம் எடுத்து நகராட்சியின் 7598171674 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
