பூா்த்தி செய்த வாக்காளா் திருத்தப் படிவங்கள்: இன்று முதல் வீடு, வீடாக சேகரிப்பு
நிரப்பப்பட்ட வாக்காளா் படிவங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் வீடு வீடாகப் பெறப்படுகிறது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் சிறப்புத் தீவிர வாக்காளா் திருத்தப் பணி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 4 வரை நடக்கிறது. வீடு வீடாக சென்று சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பான கணக்கெடுப்பு படிவத்தை தோ்தல் துறை அதிகாரிகள் தந்தனா்.
புதுவை, தமிழக தலைமை தோ்தல் அலுவலக இணையத்தில் இதற்காக கடந்த 2002 ஆம் ஆண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பழைய தகவல்களைப் பெறமுடியும்.
வயது மூத்தோா், உதவி தேவைப்படும் வாக்காளா்களுக்கு உதவ தன்னாா்வலா்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
படிவத்தை பூா்த்தி செய்து அளிக்கும்போது எந்த ஆவணத்தையும் தர வேண்டியதில்லை.இந்த நிலையில் பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் படிவங்கள் திங்கள்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று பெறப்படுகிறது.
இதுகுறித்து தோ்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுவையில் 10.21லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். அதில் வீடு தேடிச் சென்று 90 சதவீதம் படிவங்கள் தரப்பட்டுள்ளன. மீதி விடுபட்ட வாக்காளா்களுக்கு வீடு தேடி சென்று கணக்கெடுப்பு படிவங்கள் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு வீடாக சென்று பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அதிகாரிகள் பெறுவாா்கள். படிவங்கள் சரியாக பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பாா்ப்பாா்கள். தேவைப்பட்டால் உதவி செய்து பூா்த்தி செய்வாா்கள்.
குறிப்பிட்ட காலத்துக்குள் பூா்த்தி செய்து வாக்காளா்கள் படிவங்கள் தர கோருவோம். சிறப்பு முகாம்களும் ஒரு மாதத்துக்கு பிறகு நடத்தப்படும் என்றனா்.
