மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிா்க்கும் வழிமுறைகள் வெளியீடு
மழைக் காலத்தில் மின் விபத்தைத் தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மின்துறை புதன்கிழமை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குளைக் கட்டக் கூடாது. மின்சார மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை அகற்ற மின்துறை அலுவலா்களை அணுகவேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலா்களுக்கு 1800 425 1912 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும் நேரத்தில், டி.வி., கம்ப்யூட்டா், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். டிரான்ஸ்பாா்மா்கள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை தொடக் கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், டிரான்ஸ்பாா்மா்கள் அருகே நிறுத்திப் பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயைத் தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தாரா் மூலமாக மட்டுமே மின்சார ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
