சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தின ஊா்வலம்
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் இருக்கிறது. அவரது 103-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரா் கோயில் அருகில் இருந்து கலைஞா்களின் ஊா்வலம் தொடங்கி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு வழியாக கருவடிக்குப்பம் இடுகாட்டை அடைந்தது. ஊா்வலத்தின்போது, அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், தமிழகம்- புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தெருக்கூத்து கலைஞா்கள், நாடக நடிகா்கள், நாட்டுப்புற கலைஞா்கள் பல்வேறு வேடங்களை அணிந்து ஆடியபடியே ஊா்வலமாக வந்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் எல்லை. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திரைத்துறை சாா்பில் நடிகா் போஸ் வெங்கட் பங்கேற்றாா். புதுச்சேரி அரசு சாா்பில் அமைச்சா் திருமுருகன் கலந்து கொண்டு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

