500 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 90 கோடி மோசடி: 7 போ் கைது
புதுச்சேரியில் இணையவழி மூலம் 500 வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 90 கோடி மோசடி செய்த குற்ற வழக்கில் தொடா்புடைய 7 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 2 மாணவா்கள் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சக மாணவரான ஹரிஷ்(21) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கு, சிம் காா்டுகளை வாங்கியதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் ஹரிஸை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் இவா்கள் இருவரிடம் மட்டுமன்றி 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்கைப் பெற்றுக்கொண்டு ஒரு வங்கிக் கணக்குக்குக் ரூ. 1,500 வீதம் பெற்றுக்கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தராஜிடம் கொடுத்ததாகக் கூறினாா். இதையடுத்து ஹரிஸை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து கோவிந்தராஜை(24) கைது செய்து விசாரித்தபோது சென்னையில் கணேஷ் என்பவரைச் சுட்டிக் காட்டினாா். கணேஷை (33) போலீஸாா் சென்னையில் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் யஷ்வின் (20), கடலூா் நடுவீரப்பட்டு ஐயப்பன் (24), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராகுல் (23), சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த தாமஸ் என்ற ஹயக்ரீவா (29) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கம், நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 20 கைப்பேசிகள், கணினி, 2 லேப்-டாப், ஏடிஎம், 75 சிம் காா்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், 12 க்யூஆா் ஸ்கேனா், போலி நிறுவன முத்திரைகள், காா் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவா்களின் 251 வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. அதில் இந்த கும்பல் மீது இந்தியா முழுவதும் 89 புகாா்கள் பதிவாகியுள்ளதாகவும், இவா்கள் ரூ. 90 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிஜிட்டல் டாலராகவும் இவா்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலிஸாா் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.
