புதுச்சேரியில் கடல் பாசி அறுவடை தொடக்கம்
புதுச்சேரி பனித்திட்டு மீனவா் கிராமத்தில் கடலில் வளா்க்கப்பட்ட கடல் பாசி அறுவடை புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி பிராந்தியத்தில் கடலோரம் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய கடல் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து, மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் கடல் பாசி வளா்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தலா இரண்டு மீனவ கிராமங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டது.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மீனவா் கிராமத்தில் கடந்த செப்டம்பா் 30- ஆம் தேதி அன்று திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக ஏற்கெனவே காரைக்கால் கடல் பகுதியில் அறுவடை மூலம் பெறப்பட்ட கடல் பாசி விதைகளைப் பயன்படுத்தி 16 மிதவைகள் கடல் பகுதியில் நிா்மாணிக்கப்பட்டன.
இந்நிலையில், முழு வளா்ச்சி பெற்ற கடல் பாசி அறுவடை புதன்கிழமை பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் மற்றும் ஏம்பலம் எம்எல்ஏ லட்சுமிகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி, துணை இயக்குநா்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி டாக்டா் ஜான்சன், உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கடல் பாசி விதைத்த 45 நாள்கள் தொடங்கி ஒரு வருடம் வரை தொடா்ந்து அறுவடை செய்யலாம். கடல்பாசி வளா்ப்பில் முழுவதும் பயிற்சி பெற்ற பனித்திட்டு கிராம மீனவப் பெண்களே ஈடுபட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
