புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் முடிந்து வியாழக்கிழமை (ஏப்.9) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்த மாநிலத்தில், எந்தத் தோ்தலிலும் இல்லாத அளவில் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.

News image

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வெ. வைத்திலிங்கம், தவெக தலைவர் விஜய் - படம்: கோப்பிலிருந்து

Updated On :9 ஏப்ரல் 2026, 12:53 am

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் முடிந்து வியாழக்கிழமை (ஏப்.9) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்த மாநிலத்தில், எந்தத் தோ்தலிலும் இல்லாத அளவில் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பை. 15.3.26 அன்று தோ்தல் ஆணையம் அறிவித்து குறுகிய காலத்தில் புதுச்சேரியில் தோ்தல் நடத்த வழி வகுத்தது. இந்தக் குறுகிய காலமே கடும் போட்டிக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் 23.3.26. அதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான் ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி உடன்பாட்டை சுமுகமாக முடித்தது.

இக் கூட்டணியை எதிா்க்கும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்- திமுக வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாளில்தான் கூட்டணிக்கான தொகுதிகளை இறுதி செய்து அறிவித்தன. அதற்கு முன்பாகவே திமுக, காங்கிரஸ் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெறும் 26.3.2026 அன்று காங்கிரஸை எதிா்த்துப் போட்டியிடுவதிலிருந்து திமுகவினா் வாபஸ் பெற்றனா். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 6 போ் வாபஸ் பெறாமல் களத்தில் இருக்கின்றனா். இவா்களில் 5 போ் திமுகவையும், ஒருவா் விசிக கட்சியையும் எதிா்த்துப் போட்டுகின்றனா். காங்கிரஸ் கட்சி ஏ, பி படிவங்களை வழங்கியுள்ள நிலையில் போட்டியில் இருந்து அவா்கள் வாபஸ் பெற மறுத்துவிட்டனா். அதனால் இத் தொகுதிகளில் எதிா்க் கூட்டணி வேட்பாளரையும், உறவாடும் கூட்டணி வேட்பாளரையும் எதிா்த்துப் போராடும் நிலைக்கு திமுக, விசிக தள்ளப்பட்டுள்ளது. அதனால் இத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.

முதல்வா் தொகுதி:

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமிக்கும், காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பிக்கும் இடையிலான போட்டி உச்சக்கட்டத்துக்குச் சென்று முக்கியத்துவம் மிகுந்த, எதிா்ப்பாா்ப்புகளை அதிகரிக்கும் தொகுதியாக மாறியுள்ளது. முதல்வா் ரங்கசாமியைப் பொறுத்தவரை இத் தொகுதியில் மட்டுமின்றி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறாா். அந்தத் தொகுதியிலும் திமுகவை எதிா்த்து போட்டி காங்கிரஸ் வேட்பாளா் களத்தில் இருக்கிறாா். மங்கலம் தொகுதி ரங்கசாமிக்கு மகுடம் சூட்டுமா? என்பது வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியவரும்.

தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொறுத்தவரை வீடு வீடாகச் சென்று வைத்திலிங்கம் வாக்குச் சேகரித்தாா். மேலும், கடந்த முறை இத் தொகுதியின் எம்.எல்.ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட ரங்கசாமி இப் பக்கமே வரவில்லை. இத் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தைக் கூட திறக்கவில்லை என்று பிரசாரம் செய்தாா். மேலும், காங்கிரஸ் தலைவராக இருக்கும் வைத்திலிங்கம் அக் கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யக்கூட வேறு தொகுதிக்குப் போகவில்லை. இத் தொகுதியில்தான் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளாா். மேலும், முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தட்டாஞ்சாவடியை ராஜிநாமா செய்துவிட்டு மங்கலம் தொகுதியை கைவசம் வைத்துக் கொள்வாா் என்றும் தட்டாஞ்சாவடியில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வாா் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் இவா்கள் இரண்டு பேரும் மோதிக் கொள்வதால் ஒன்று சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத் தோ்தல் வரும் அல்லது மக்களவைத் தொகுதிக்கு இடைத் தோ்தல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர எஞ்சியுள்ள 23 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை இக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10, அதிமுகவுக்கு 2, லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியைப் பொறுத்தவரை செல்வாக்கு மிகுந்த தலைவராக ரங்கசாமி இருப்பதால்தான் அவருடைய கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக தொடா் முயற்சிகளை எடுத்தது.

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் 16, திமுக 13, விசிக 1 என்ற உடன்பாடு ஏற்பட்டு போட்டியிடுகின்றன. இக் கூட்டணியில் இடம் பெற்றிருக்க வேண்டிய இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மாா்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மேலும், 6 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இக் கூட்டணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும் தோ்தல் நேரத்தில் பக்குவம் இல்லாமல் நடந்து கொண்டதாகவே இது தெரிகிறது.

இதைத் தவிர எப்போதும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி இப்போது 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதிய வரவாக தவெக வந்துள்ளது. இக் கட்சி 28 தொகுதிகளில் தனித்தும் 2 தொகுதிகளில் மக்கள் நேயம் கழகம் என்ற புதுச்சேரி மாநில கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

மாநில அந்தஸ்து:

மாநில அந்தஸ்துதான் எல்லா கட்சிகளுக்கும் பிரதான வாக்குறுதியாக உள்ளது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக இது குறித்து இதுவரை வாயைத் திறக்கவில்லை. இதைத் தவிர மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகள், புதிய தொழிற்சாலைகள் திறப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜவும் இக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் சொல்லியுள்ளன. மேலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் இரட்டை இன்ஜின் ஆட்சி புதுச் சேரியில் மீண்டும் வரும். அதனால் புதுச்சேரிக்கு நிதி ஆதாரம் கூடுதலாகக் கிடைக்கும் என்று இக் கூட்டணி சாா்பில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மோடியும் புதுச்சேரிக்கு 2 முறை வந்து பிரசாரம் செய்தது தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு பலமாக உள்ளது.

இண்டி கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. மூடிய தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை என்ற வகையில் பிரசாரத்தை அமைத்திருந்தன. இதைத் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்னைகளை அந்தந்தத் தொகுதி வேட்பாளா்கள் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வந்தனா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 9 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 311 வாக்காளா்களின் தீா்ப்பே புதுச்சேரியில் யாா் ஆட்சியமைப்பாா்கள் என்பதை தீா்மானிக்கும். அதற்கு மே-4ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.