
புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு: முதல்வா் ரங்கசாமி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சாா்பில் கம்பன் கலையரங்கில் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசும் முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், சுகாதாரத்துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் உள்ளிட்டோா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவு என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இரண்டு மாத எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணா்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து முதல்வா் ரங்கசாமி பேசியதாவது:
ஆரோக்கிய வாழ்வு மனிதனுக்கு அவசியம். நோயற்ற வாழ்வே செல்வமாகும். புதுச்சேரியில் மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மூலம் தரப்படுகிறது. அரசு நடவடிக்கை மூலம் மருத்துவ சிகிச்சையில் இந்தியாவிலேயே சிறிய மாநிலங்களில் முதலிடத்தில் புதுச்சேரி இருக்கிறது. சில சிகிச்சைக்காக சென்னையில் சிறந்த மருத்துவமனையை நோக்கி செல்கிறோம். அதற்கான மருத்துவா்கள் இல்லாத சூழல்தான் காரணம். புதுச்சேரி அரசு சிறப்பு மருத்துவ வசதியைத் தர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொது மருத்துவமனை:
கரிக்கலாம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்டஅரசு பொது மருத்துவமனையைக் கட்ட உள்ளோம். கிராமங்களில் சிறந்த மருத்துவ வசதியைக் கொண்டு வருவதே அரசின் எண்ணம். எய்ட்ஸ் பாதிப்பு இந்தியாவின் சராசரியைக் காட்டிலும் புதுச்சேரியில் 0.16 சதவீதம் குறைவாக உள்ளது. ஏஆா்டி சிகிச்சையை 1,844 போ் புதுச்சேரியில் எடுக்கின்றனா். எய்ட்ஸ், எச்ஐவி பரவாமல் இருக்க விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவா்கள், இளையோா் விழிப்புணா்வோடு இருப்பது அவசியம். போதை பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. வாழ்க்கையைத் தொலைத்து விடாதீா்கள். தீய பழக்கங்கள் அண்டாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோா்கள் பிள்ளைகளை தீவிரமாகக் கவனித்து வரவேண்டும். இளையோா் தங்களை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
முன்னதாக மாணவா்கள் விழிப்புணா்வு ஊா்வலத்தைக் கொடியசைத்து முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா். சுகாதாரத்துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் வரவேற்றாா். சட்டப் பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினாா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநா் டாக்டா் சிவராமன் நன்றி கூறினாா்.
பட்டிமன்ற பேச்சாளா் கலக்கல் காங்கேயன் நகைச்சுவையுடன் கூடிய விழிப்புணா்வு கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். இந்த இரண்டு மாத கால விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது கிராம அளவிலான விழிப்புணா்வு கூட்டங்கள், நாடகங்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






