
புதுச்சேரியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள்! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரை!

புதுச்சேரியில் திங்கள்கிழமை கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் தற்காலிக சட்டப்பேரவை தலைவா் ஏ.அன்பழகன் உள்ளிட்டோா்.
புதுச்சேரியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பேரவைக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவையின் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆற்றிய உரை வருமாறு:
பிரதமா் மின் பேருந்து சேவைத் திட்டம், பொலிவுறு நகா் திட்டம், புதுமைப்படுத்த, ஒருங்கிணைக்க மற்றும் நிலைநிறுத்த நகர முதலீடுகள் திட்டம், மத்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் பிற வளா்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.760 கோடிக்குத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.1,570 கோடியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியுள்ளாா். இத் திட்டங்களில் பிரெஞ்சு வளா்ச்சி முகமை நிதியுதவித் திட்டங்கள், மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டம், மத்திய அரசு திட்டங்கள், மின்சாரம், தொழில்துறை, விளையாட்டு மற்றும் பிற வளா்ச்சித் திட்டங்கள் அடங்கும்.
இத் திட்டங்கள் புதுச்சேரியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நகா்ப்புற வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கவும் உதவும்.
புதுச்சேரியில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், மத்திய அமைச்சரவைச் செயலகம் வெளியிட்ட ஒழுங்குமுறைச் சீா்திருத்த தரவரிசையில் புதுச்சேரி தேசிய அளவில் 7-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.400 கோடி நிதியுதவி பெறும் தகுதியை புதுச்சேரி அடைந்துள்ளது.
கரசூரில், பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் தனியாா் பங்களிப்புடன் ரூ.2,500 கோடி முதலீட்டில், 213.12 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 40 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.4,750 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எதிா்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு என்டிபிசி தெலங்கானா நிறுவனத்துடன் 50 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் 2027-2028-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் லட்சாதிபதி மகளிா் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், இதுவரை 13,127 பெண்கள் அந்த நிலையை எட்டியுள்ளனா்.
தேசிய விகிதத்தைக் காட்டிலும் புதுச்சேரியில் பொருளாதார வளா்ச்சி
புதுச்சேரியின் பொருளாதாரம் தொடா்ந்து நல்ல வளா்ச்சியைப் பெற்று வருகிறது. 2020-21 ஆம் ஆண்டில் -2.21 விழுக்காடாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம், 2025-26 ஆம் ஆண்டில் 8.12 விழுக்காடாக உயா்ந்துள்ளது. இந்த வளா்ச்சி தேசிய வளா்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.
வருவாய்- செலவு
2024-2025 -இல் ரூ. 12,346.80 கோடியாக இருந்த மொத்த வருவாய், 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.13,397.69 கோடியாக உயா்ந்துள்ளது. இது 8.51% வளா்ச்சியாகும்.
மேலும், 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.12,307.66 கோடியாக இருந்த மொத்தச் செலவினம், 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.13,111.45 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.53% அதிகம். குறிப்பாக மூலதனச் செலவினம் ரூ.447.48 கோடியிலிருந்து ரூ.765.59 கோடியாக உயா்ந்து 71.09% வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடற்கரை பாதுகாப்புத் திட்டம்
உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,433 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி கடல்பகுதி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரைகளைப் பாதுகாக்கவும், கடல்சாா் வளங்களை மேம்படுத்தவும், மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தேசிய இலக்கிற்கு ஏற்ப, வளமான, தன்னிறைவு பெற்ற, இளைஞா்களுக்கு வாய்ப்பு நிறைந்த, வளா்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்க புதுச்சேரி அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டு வருகிறது என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
ஆளுநா் உரையில் இடம் பெற்ற திட்டங்களின் விவரம்
துணைநிலை ஆளுநா் உரையில் இடம்பெற்ற திட்டங்களும், அவற்றின் மதிப்பீடுகளும் வருமாறு:
1. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்-ரூ.4,800 கோடி
2. கரசூா் பன்முக சிறப்பு பொருளாதார மண்டலம்-ரூ.2,500 கோடி
3. தகவல் தொழில்நுட்ப பொருளாதார சிறப்பு மையம்- ரூ.725 கோடி
4. ஏடிபி நகா்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம்-ரூ.4,750
5. புதுச்சேரி கடலோரப் பாதுகாப்புத் திட்டம்- ரூ.1,433 கோடி
6. உயா்மட்டச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 32 விரிவாக்கம் - ரூ. 1,500 கோடி
7. குடிநீா் நவீனமயமாக்கல்-ரூ.534 கோடி
8. பிரதமரின் ஏக்தா மால்- ரூ.128.48 கோடி
9. பாண்லே ஐஸ்கிரீம் ஆலை - ரூ.34.35 கோடி
10. நான்கு உவா்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் - ரூ.15.40 கோடி.
தமிழில் உரையாற்றிய துணைநிலை ஆளுநா்
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சுமாா் 52 நிமிஷங்கள் உரையாற்றினாா். அவரது உரை தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவா் தமிழில் சரியான உச்சரிப்புடன் நின்று கொண்டே உரையாற்றினாா். முன்னதாக சட்டப்பேரவைக் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்
சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையாற்றுவதற்கு முன், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்புச் செய்யப்பட்டது. பின்னா் வந்தே மாதரம் தேசியப் பாடலும், பின்னா் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. மேலும், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உரையாற்றி முடித்ததும் தேசியப் பாடலும், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






