புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச்சாவடி திறப்பு
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், புதுச்சேரி சேலியமேட்டில் அமைத்துள்ள சுங்கச் சாவடி புதன்கிழமை திறக்கப்பட்டது. வாகனங்களுக்கு கட்டண வசூலும் தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில், 194 கி.மீ., துாரத்திற்கு நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இச்சாலையில், விழுப்புரம் கெங்கராம்பாளையத்திலும், கடலுாா் மாவட்டம் கொத்தட்டை மற்றும் நாகப்பட்டினத்தில் ஓா் இடத்திலும் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட சேலியமேடு சந்திப்பில், புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடியில் கடந்த 24ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுமென தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் சுங்கச்சாவடியில் பணிகள் முழுமையாக முடியாததால் சுங்கச்சாவடி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த மாதம் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் புதன்கிழமை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி சுங்கச்சாவடி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. சுங்கச்சாவடி வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தவிர எஞ்சிய அனைத்து வாகனங்ளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த சாலையில் ஏற்கெனவே குறிப்பிட்ட தொலைவில் சுங்கச் சாவடி இருப்பதால் இங்கு சுங்கச் சாவடி அமைக்க சமூக அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தன. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்தச் சுங்கச்சாவடி திறக்கப்பட்டது.

