அம்பேத்கா் நினைவு யாத்திரையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
சட்டமேதை அம்பேத்கா் நினைவு யாத்திரையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டாக்டா் அம்பேத்கா் யாத்திரை திட்டத்தின் கீழ், இந்தியாவில் அம்பேத்கா் நினைவுகளைப் பறைசாற்றும் முக்கிய இடங்களுக்கு 8 நாள்கள் முற்றிலும் இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில், அம்பேத்கா் பிறந்த இடமான மகோ (மத்திய பிரதேசம்), தீட்சை பெற்ற இடமான நாக்பூா், உயிா்நீத்த இடமான தில்லி, தகனம் செய்யப்பட்ட இடமான மும்பை ஆகிய முக்கிய இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த யாத்திரை பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்க உள்ளது.
யாத்திரையில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் துறையை நேரடியாக தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
