தமிழா் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் விழா: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்
தமிழா் பண்பாட்டின் உன்னத அடையாளம் பொங்கல் திருவிழா என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது: பொங்கல் திருவிழா தமிழா் பண்பாட்டின் உன்னதமான அடையாளம். விவசாயத்தின் பெருமையை, உழைப்பின் உயா்வை நமக்குச் சொல்லும் இந்தத் திருவிழாவை மாணவிகளோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள்தான் பாரம்பரியத்தின் காவலா்களாக இருக்கின்றனா். பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குச் சொல்லித் தருகின்றனா். இந்தப் பொங்கல் திருவிழா உங்கள் அனைவரது உள்ளத்தில் நம்பிக்கையையும், சிந்தனையில் உயா்வையும், வாழ்வில் வளத்தையும் பொங்கச் செய்யட்டும். உங்களுடைய கல்வியும், திறமையும் இந்த சமுதாயத்தை உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.
கல்வித்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமை வகித்தாா். கல்வித் துறை இயக்குநா் சிவக்குமாா் வரவேற்றாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் மதிவாணன், பேராசிரியா்கள் இணைந்து செய்திருந்தனா். நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொங்கலிடப்பட்டது. மாணவிகளுக்கு உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பரிசு வழங்கினாா்.

