அமைச்சா் அ.ஜான்குமாா்
அமைச்சா் அ.ஜான்குமாா்

இலாகா ஒதுக்காததில் சதி: புதுச்சேரி பாஜக அமைச்சா் குற்றச்சாட்டு

பதவி ஏற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எனக்கு இலாகா ஒதுக்குவதை தடுக்க சதி நடக்கிறது
Published on

புதுச்சேரி: பதவி ஏற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எனக்கு இலாகா ஒதுக்குவதை தடுக்க சதி நடக்கிறது என்று புதுச்சேரி அமைச்சா் அ.ஜான்குமாா் குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பாஜக சாா்பில் அ. ஜான்குமாா் அமைச்சராகப் பதவியேற்றாா். சுமாா் 190 நாள்கள் கடந்த நிலையிலும் அவருக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பதவி ஏற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் எனக்கு இலாகா ஒதுக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது. எனது தொகுதி மக்கள் அரசைக் குறை கூறுகின்றனா். இந்தியாவை ஆளக்கூடிய பாஜக கட்சியின் அமைச்சருக்கே இந்த நிலைமையா? என்று ஆதங்கப்படுகின்றனா்.

அந்த அளவுக்கு கூட்டணி ஆட்சியின் முதல்வா் ரங்கசாமி பாஜகவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறாரா என்று மக்கள் பேசுகிறாா்கள்.

எனக்கு இலாகா ஒதுக்கக் கூடாது என்று சதி நடக்கிறது. எங்கு தப்பு நடக்கிறது என்று தெரியவில்லை.

புதுச்சேரியை, சிறந்த மாநிலமாக்க வேண்டுமென்றால், இங்கு பாஜக நேரடி ஆட்சியில் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

என்.ஆா். காங்கிரஸ் கட்சிக்கு, என்னை வரும்படி முதல்வா் ரங்கசாமி அழைத்தாா். நான் செல்லவில்லை என்பதால், எனக்கு இலாகா ஒதுக்க

மறுக்கிறாா். புதுச்சேரிக்கு நல்லது செய்வதற்காக, தொழிலதிபா் சாா்லஸ் மாா்ட்டினை அழைத்து வந்தேன். இதற்கிடையில் பாஜக வளையத்தில் சாா்லஸ் மாா்ட்டினைக் கொண்டு வந்து விட்டாா்கள்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இலாகா இல்லாமல் அமைச்சராக என்னை அழைத்தபோது கஷ்டமாக இருந்தது. முதல்வா் ரங்கசாமியை சித்தராகப் பாா்க்கிறேன் என்றாா் ஜான்குமாா்.

Dinamani
www.dinamani.com