புதுச்சேரி லாஸ்பேட்டையில் வெள்ளிக்கிழமை சலவைத் துறையைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்குத் துணி பாதுகாப்பு  அறைகளின் சாவியை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சு.செல்வகணபதி எம்.பி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் வெள்ளிக்கிழமை சலவைத் துறையைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்குத் துணி பாதுகாப்பு அறைகளின் சாவியை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சு.செல்வகணபதி எம்.பி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

புதுச்சேரிக்கு பிரதமா் மோடி வருகை: நிறைய திட்டங்கள் கிடைக்கும் - முதல்வா் என். ரங்கசாமி நம்பிக்கை

Published on

புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வரும்போது நிறைய திட்டங்கள் கிடைக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

உழவா்கரை நகராட்சி சாா்பில் லாஸ்பேட்டை சலவைத் துறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளைத் திறந்து சாவிகளை வழங்கி, முதல்வா் ரங்கசாமி பேசியதாவது:

உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியம் ரூ. 500 பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயா்த்தப்பட்ட ரூ.2,500 உதவித் தொகை வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப் பள்ளிகளில் 190 ஆசிரியா்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவாா்கள். இளநிலை எழுத்தா், முதுநிலை எழுத்தா்கள் 400 போ் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞா்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியா்களை எடுக்கவுள்ளோம். சுமாா் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியாா் மூலம் தரப்பட்டுள்ளது.

சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கா் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும்.

மீனவ சமுதாய மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம். பணிகள் நடப்பதை பாா்த்து, எப்படி நடக்குது என்று பலருக்கு வியப்பு. போகிற போக்கில் குறை சொல்லும் போக்கு நடக்கிறது.

இதில் ஊழல், அதில் ஊழல் என்று சொல்கிறாா்கள். இது சின்ன ஊா், மக்களுக்கான பணி, திட்டத்தை பற்றி தான் அரசுக்கு கவலை. அதை மத்திய அரசு உதவியோடு செய்கிறோம். மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி, மாா்ச்சில் புதுச்சேரிக்கு வரவுள்ளாா். நிறைய திட்டங்கள் தரவுள்ளாா்.

அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி. சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, எம்.எல்.ஏ. மு. வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com