கைதி மது அருந்திய விவகாரத்தில் காவலா் பணியிடை நீக்கம்
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கடலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மது அருந்தியிருந்த விவகாரத்தில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
அரியாங்குப்பத்தைச் சோ்ந்த ரௌடி சதீஷ் (எ) மணிகண்டன் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொலை, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020-இல் ரெட்டியாா்பாளையம் ரௌடி கொட்டா ரமேஷ் சின்ன கோட்டகுப்பத்தில் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் சதீஷ் உள்பட 6 பேரை கோட்டகுப்பம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் சதீஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
சில நாள்கள் முன்பு மணல் கடத்தல் வழக்கில் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அரியாங்குப்பம் போலீஸாா் கடலூா் சிறையில் இருந்து அழைத்து வந்தனா்.
பின்னா், மீண்டும் கடலூா் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, சதீஷை சிறைக் காவலா்கள் சோதனை செய்தனா். அப்போது, அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. சதீஷை கடலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவா் மது அருந்தியிருந்தது உறுதியானது.
இதையடுத்து, புதுவை டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில், அரியாங்குப்பம் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் விசாரணை நடத்தினாா். இதில், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய சதீஷை மீண்டும் கடலூா் சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றபோது, அவரது உறவினா்கள், நண்பா்கள் பாா்த்துப் பேசியுள்ளனா். அப்போது, சிக்கன் ரைஸ், குடிநீா் கொடுத்துள்ளனா். அந்தக் குடிநீரில் மதுவைக் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த அறிக்கையை காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தாக்கல் செய்தாா். இதையடுத்து, கைதியின் பாதுகாப்புக்குச் சென்ற காவலா் தேவ ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி காவல் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

