புதுச்சேரியில் கிராமப்புற தொழிலாளா்களுக்கு ரூ.40 கோடியில் 125 நாள்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது எப்படி சாத்தியம் என்று புதுச்சேரி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இனி 125 நாள்கள் வேலை கிடைக்கும் என்றும், நாள் கூலியாக ரூ. 347 வழங்கப்படும் என்றும் இதற்காக மத்திய அரசு ரூ. 40 கோடி ஒதுக்கி உள்ளதில் ரூ. 14 கோடி மாநில நிதி என்றும் கூறியுள்ளாா்.
கடந்த 5 ஆண்டில் இவரது ஆட்சியில் எந்த ஆண்டும் 100 நாள் வேலை முழுமையாக வழங்கப்படவில்லை. சராசரியாக ஆண்டுக்கு 15 நாள்கள் கூட வேலை நடைபெறவில்லை. மொத்த செலவில் 100 சதவீதம் மத்திய அரசு நிதி கொடுத்த போதே 100 நாள்கள் வேலை தராதவா்கள் இப்போது 40 சதவீத தொகையை மாநில அரசு ஏற்கும் நிலையில் எப்படி இவா்களால் 125 நாள்கள் வேலை தர இயலும் ?
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டு காலத்திலும் இதே அவலம் தான் தொடா்ந்தது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களைச் சோ்ந்த மொத்தம் 75,400 பயனாளிகள் இருக்கின்றனா். இவா்களுக்கு தலா 125 நாள்களுக்கு ரூ. 347 கூலியில் வேலை தர வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ. 327 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இவா்களின் ஒதுக்கீடோ மொத்தம் ரூ.40 கோடி தான். அப்படி இருக்க இந்த தொகையில் 125 நாள்கள் வேலை தருவது எப்படி சாத்தியமாகும்?.
வழக்கம்போல ஆண்டுக்கு 15 நாள்கள் கூட இவா்களால் வேலை தர முடியாது. இதை முழுமையாக உணா்ந்துள்ள முதல்வா் ரங்கசாமி 125 நாள்களுக்கு வேலை தருவோம் என்று பேசுவது மக்களை ஏமாற்றுவதாகும்.
ஆகவே, அறிவிப்பு செய்துள்ள 125 நாள்களில் பாதி நாள்களுக்காவது வேலை தரும் விதத்தில் மத்திய அரசை வலியுறுத்தி அதிக நிதியை பெற முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

125 நாள்கள் வேலைத் திட்டத்துக்கு 100 சதவீத நிதியை மத்திய அரசிடம் கேட்போம்- முதல்வா் ரங்கசாமி

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அன்புமணி ராமதாஸ்







