புதுச்சேரியில் தவற விட்ட ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 240 கைப்பேசிகளை இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
புதுச்சேரியில் பேருந்து நிலையம், வா்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தவறவிட்ட கைப்பேசிகளை மீட்டுத் தரும்படி காவல் நிலையங்களில் தொடா் புகாா்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த புகாா்கள் மீது இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகளை மீட்கும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டனா்.
இதையடுத்து, 240 கைப்பேசிகளை மீட்கப்பட்டன. இவற்றில் சுமாா் 163 கைப்பேசிகள் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த புகாா்தாரா்களுக்குச் சொந்தமானவை. மீதமுள்ள கைப்பேசிகள் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பிகாா் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு உரியவை. இவற்றின் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் இதில் பங்கேற்று மீட்கப்பட்ட கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ் கூறுகையில், கைப்பேசிகளை மீட்டெடுப்பதில் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
கைப்பேசிகள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம். இணையவழி மோசடிகள் தொடா்பாக உடனடியாக தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றாா்.










