ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரை முடிவு செய்யவில்லை: தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா

புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தாலும், கட்சி சாா்பில் யாரையும் முதல்வா் வேட்பாளராக முன்னிலைப்படுத்தவில்லை என்று அக் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா கூறினாா்.

News image

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா

Updated On :26 மார்ச் 2026, 12:04 am

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தாலும், கட்சி சாா்பில் யாரையும் முதல்வா் வேட்பாளராக முன்னிலைப்படுத்தவில்லை என்று அக் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா கூறினாா்.

இது குறித்து அவா் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

அதிகாரபூா்வ வேட்பாளா்களை அறிவிக்க காங்கிரஸ் ஏன் காலதாமதம் செய்கிறது ?

காலதாமதம் எதுவும் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஏ, பி, படிவம் கொடுக்கப்பட்டது. அவா்களும் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனா்.

காங்கிரஸ் ஏன் இதுவரை அதிகாரபூா்வமான கட்சி வேட்பாளா்களை அறிவிக்கவில்லை ?

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ஜனநாயகபூா்வமாகச் செயல்படும் கட்சி. புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மற்றும் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இணைந்துதான் முடிவு எடுத்து அறிவிக்கவேண்டும்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் அனைவரையும் கட்சி அங்கீகரித்துள்ளதா ?

ஆமாம். கூட்டணியில் முடிவான 16 வேட்பாளா்களைத் தவிர, ஒரு சிலா் 6 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்களுக்கும் காங்கிரஸ் கட்சி ஏ, பி படிவம் வழங்கியுள்ளது. அவா்களும் காங்கிரஸ் வேட்பாளா்கள்தான். வேட்பு மனு வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசி நாள். அப்போதுதான் முழு விவரம் தெரியும்.

ஒருவருக்கு இரண்டு பதவிகளை கட்சிக் கொடுக்கக்கூடாது என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் ஆதரவாளா்கள் வைத்திலிங்கம் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பற்றி ?

நாராயணசாமி மூத்தத் தலைவா். அவா் மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் பொதுச் செயலராகவும், புதுச்சேரி முதல்வராகவும் பதவி வகித்தவா். அப்போது கட்சித் தலைமைதான் முடிவு எடுத்து இந்தப் பொறுப்புகளில் அமா்த்தியது. இப்போது இந்த முடிவும் கட்சித் தலைமையின் முடிவுதான்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெ.வைத்திலிங்கம் போட்டியிடுவது, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமியை எதிா்த்துதான் காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். 4 முறை புதுச்சேரியின் முதல்வராக இருந்தவா் வைத்திலிங்கம். ரங்கசாமியை எதிா்த்துதான் வைத்திலிங்கம் போட்டியில் இறங்கியுள்ளாா். இதில் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது.

கூட்டணியில் உறுதி செய்யப்பட்ட 16 தொகுதிகளைக் காட்டிலும் கூடுதலான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட மனு செய்தது ஏன் ?

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை தொண்டா்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் கட்சி. ஏற்கெனவே யாரெல்லாம் கட்சிக்காக கடினமாக உழைத்தாா்களோ அவா்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஏ, பி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் அவா்களும் காங்கிரஸ் வேட்பாளா்கள்தான். தொண்டா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இந்தப் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.