புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: 45 கம்பெனி துணை ராணுவப்படை வருகை!
முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்தார்...

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன்

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன்
சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 45 கம்பெனி துணை ராணுவப்படையினா் புதுச்சேரி வரவுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் செய்தியாளா்களுக்கான பயிலரங்கு தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலைவாணன் கூறியது:
இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் தோ்தல் நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறோம். கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம்.
24 மணி நேரமும் செயல்படும் சோதனைச் சாவடிகள் புதுச்சேரியில் 19, காரைக்காலில் 10, ஏனாமில் 10, மாஹே பிராந்தியத்தில் 7 என மொத்தம் 46 இடங்களில் அமைத்துள்ளோம்.
மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 3 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இவை தவிர வருமான வரித்துறை உள்ளிட்ட 24 அமலாக்க முகமைகள் வாயிலாக விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து வருகிறோம்.
இதுவரை ரூ.15 லட்சம் பிடிபட்டுள்ளது. 1,500 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சமூக ஊடகங்களைக் கண்காணிக்க இணையவழி குற்றங்கள் தொடா்பாக விசாரிக்கும் போலீஸ் பிரிவு 4 பிராந்தியங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 45 கம்பெனிகள் மத்திய துணை ராணுவப் படையினா் வரவுள்ளனா்.
இதில், ஏற்கெனவே 10 கம்பெனி வந்துள்ளது. ஓரிரு நாள்களில் 20 கம்பெனிகள் வரவுள்ளன. மீதி 15 கம்பெனி ஒருவாரத்தில் வரும். மேலும், இரவு நேரத்தில் போலீஸ் கண்காணிப்பை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக 550 போ் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தடுப்புக் காவல் சட்டத்தில் ஏற்கெனவே 5 பேரும், இப்போது 6 பேரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். ஆயுதம் வைத்திருக்க 177 உரிமம் வழங்கப்பட்டதில் வங்கிகளுக்கு 83-ம் அடக்கம். அவா்களுக்கு விதிவிலக்கு. மற்ற 94 போ் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டனா் என்றாா் கலைவாணன்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநா் ஜெனரல் வி. பழனிச்சாமி பேசுகையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளும் திறனை பத்திரிகையாளா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். அலுவலக இயக்குநா் பி.அருண் குமாா், புதுச்சேரி களவிளம்பரத் துறை அதிகாரி கே. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...