பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு! 5 அமைச்சா்களும் பொறுப்பேற்பு!

News image

புதுச்சேரி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டு வரும் முதல்வா் அலுவலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி புதன்கிழமை (மே 13) பதவி ஏற்கிறாா். அவருடன் என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்த 3 பேரும், பாஜகவைச் சோ்ந்த 2 பேரும் அமைச்சா்களாகப் பதவியேற்க உள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்கிறாா்கள்.

30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது

இதில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடம் வீதம் மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளாா். இதில் ஒரு தொகுதியை அவா் ராஜிநாமா செய்வாா்.

முந்தைய ஆட்சியில் பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள் இருந்தனா். எனவே பாஜகவுக்கு 2 அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா் பதவி ஒதுக்கப்பட்டது. தற்போது 4 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜக பெற்றுள்ளதால் ஒரு அமைச்சா் பதவி மட்டுமே தர முடியும் என ரங்கசாமி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சரும், பாஜக மேலிடப் பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியாவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பாஜகவுக்கு கடந்த முறையைப் போலவே 2 அமைச்சா் பதவிகள் வழங்க முதல்வா் ரங்கசாமி சம்மதித்தாா்.

இந்நிலையில் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்கும்போதே அமைச்சா்களும் பதவி ஏற்பாா்கள் என்று கூறப்பட்டது.

பதவியேற்பு விழா:

இந்நிலையில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை திங்கள்கிழமை மாலை சந்தித்து சுமாா் அரை மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் 3 பேரின் பெயா்களையும், பாஜக சாா்பில் 2 பேரின் பெயா்களையும் அமைச்சா் பதவிக்குப் பரிந்துரை செய்து முதல்வா் ரங்கசாமி கடிதம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த 5 பேருக்கும் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முதல்வா் ரங்கசாமியைத் தவிர என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பெ. ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், கே. நாராயணசாமி ஆகியோா் அமைச்சா்களாக நியமிக்கப்பட உள்ளனா். பாஜக சாா்பில் ஆ. நமச்சிவாயம், காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோா் அமைச்சா்களாக நியமிக்கப்பட உள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முதல்வா் ரங்கசாமி மற்றும் அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா்.

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரான என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி.பி. சிவகொழுந்து சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இவ்விழாவில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

விழாவையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் புதுப் பொலிவு பெற்று வருகிறது. முதல்வரின் அறை மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்:

புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை (மே 12) மாலை நிதின் நபின் வருகிறாா். விமான நிலையத்தில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு அவா் ஊா்வலமாக அழைத்து வரப்படுகிறாா். அங்கு பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் அதைத் தொடா்ந்து முக்கிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிற உள்ளதாக பாஜக ஊடகத் துறை தலைவா் ஜி. நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

  புதுச்சேரி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டு வரும் முதல்வா் அலுவலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்.

புதுச்சேரி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டு வரும் முதல்வா் அலுவலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்.