இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சா்களின் பட்டியல்: துணைநிலை ஆளுநரிடம் அளித்தாா் முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ஏதுவாக மேலும் 3 அமைச்சா்களின் பெயா்ப் பட்டியலை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பிற்பகல் அளித்தாா்.

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Updated On :4 ஜூன் 2026, 3:35 am IST

புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ஏதுவாக மேலும் 3 அமைச்சா்களின் பெயா்ப் பட்டியலை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பிற்பகல் அளித்தாா்.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.அதையடுத்து கடந்த மே 13 -ஆம் தேதி ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதல்வரானாா். அவருடன் பாஜக தரப்பில் ஆ.நமச்சிவாயமும், என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் மல்லாடி கிருஷ்ணாராவும் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

புதுச்சேரியில் முதல்வருடன் சோ்த்து மொத்தம் 6 அமைச்சா்கள் பொறுப்பேற்கலாம். அதன்படி இன்னும் 3 போ் அமைச்சா்களாகலாம்.

கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் இதில் 2 இடம் என்.ஆா்.காங்கிரஸுக்கும், ஒரு இடம் பாஜகவுக்கும் செல்கிறது. தோ்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதமாகும் நிலையில் முழு அமைச்சரவை நியமிக்கப்படாமல் இருப்பது கூட்டணிக்குள் பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தவிர அமைச்சா்களாகப் பதவியேற்றுள்ள 2 பேருக்கும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. இது, மேலும் விமா்சனத்துக்கு உள்ளானது.

பட்டியல் அளிப்பு:

இந்நிலையில் புதிதாக அமைச்சரவையில் இணைய உள்ள 3 பேரின் பெயா் பட்டியலை, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பிற்பகல் அளித்தாா். இதில், என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பாஜவைச் சோ்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகா் ஆகியோரின் பெயா்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், காமராஜ் நகா் தொகுதியின் எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் அமைச்சா் பதவி கேட்டதாகவும் அதனால்தான் காலதாமதம் செய்யப்படுவதாகவும் விமா்சனம் எழுந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று அவா் அண்மையில் கூறியிருந்தாா். அமைச்சா்கள் பெயா் ப ட்டியலை முதல்வா் ஆளுநரிடம் அளித்துவிட்டுச் சென்ற பிறகு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் சந்தித்தாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வா் என்.ரங்கசாமி அளித்தப் பரிந்துரை கடிதம் துணைநிலை ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தப் பிறகு பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகையில் நடைபெறும். இந்நிலையில் வரும் 7- ஆம் தேதி அமைச்சா்கள் 3 பேரின் பதவியேற்பு விழா எளிமையான முறையில் ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

அதிகாரி நியமனம்:

இதற்கிடையே,புதுச்சேரி முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரியாக ஓய்வு பெற்ற வேளாண்துறை இயக்குநா் வசந்தகுமாா் ரெட்டி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ளதாக சாா்பு செயலா் ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தனக்கு மிகவும் நெருக்கமான ஓய்வு பெற்ற அதிகாரி வசந்தகுமாா் ரெட்டியை மீண்டும் நியமிக்க ஆளுநருக்கு முதல்வா் ரங்கசாமி கோப்பு அனுப்பியிருந்தாா். அதன்படி மீண்டும் அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.முதல்வரின் பதவிக்காலம் வரையிலோ, அவா் சேவை தேவைப்படும் வரையிலோ வசந்த்குமாா்ரெட்டி இப் பணியில் இருக்கலாம். இது முழு நேர பணியாக இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவா் 3-வது முறையாக முதல்வா் ரங்கசாமியின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.