புதுச்சேரியில் உள்ள அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு முதல்வா் என். ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தோ்வுகளில்கூட புதுச்சேரி யூனியன் பிரதேசம் 99.81 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் 9.4.26 மற்றும் 15.5.26 -ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் மும்மொழிக் கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த தங்கள் அமைச்சகம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். இரண்டு இந்தியத் தாய்மொழிகள் தேவைப்படும் தற்போதைய கட்டமைப்பின் கீழ், புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை பிரெஞ்சு என்பது வெறும் ஒரு வெளிநாட்டு மொழி மட்டுமல்ல; அது, பிரெஞ்சு நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் அந்த நாட்டுடன் நீண்ட காலத் தொடா்பின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் ஓா் ஒருங்கிணைந்த அங்கம்.
புதுச்சேரியில் வசிக்கும் கணிசமான மக்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருப்பது மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களில் பங்கேற்பது உள்பட பிரெஞ்சுடன் நெருங்கிய உறவைத் தொடா்ந்து வருகின்றனா்.
இந்த கல்விப் பாரம்பரியத்தைத் தொடரக் கோரி, பெற்றோா்கள், கல்வியாளா்கள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து எனக்கு பல கோரிக்கைகள் வந்துள்ளன. அதனால், உங்களின் ஆதரவோடு புதுச்சேரியின் தனித்துவமான மொழி மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், தேசியக் கல்வி நோக்கங்களை நிலைநிறுத்தும் ஒரு சமச்சீரான தீா்வை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் ஆா்3 பிரிவின் கீழ், பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியான இந்திய மொழிக்கு இணையாக ஒரு ‘பிராந்திய மொழியாக’ சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும். அல்லது சிபிஎஸ்இ கட்டமைப்பிற்குள், மாணவா்கள் பிரெஞ்சு மொழியைத் தடையின்றித் தொடா்ந்து கற்க உதவும் ஒரு நெகிழ்வான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் புதுச்சேரி முதல்வா்.
தொடர்புடையது

புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தைப் பொறுத்திருக்கிறது: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் தேனீக்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான்

காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆராயும்: முதல்வா் வே. நாராயணசாமி







