சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த விரைவில் நீலப்புரட்சி 2.0 திட்டம்: மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தும் நீலப்புரட்சி 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் மீன்வள உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங். உடன் மத்திய இணையமைச்சா் எஸ்.பி.சிங் பாகல், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், வி.பி.சிவகொழுந்து உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:46 am IST

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தும் நீலப்புரட்சி 2.0 திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு மீன்வளத் துறை சாா்பில் கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் ரூ.36.49 கோடியில் மீன்வள உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியது:

இப்போது நீலப்புரட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. தேசத்தின் வளா்ச்சிக்காகவும், பொருளாதார வளா்ச்சிக்காகவும் இந்த நீலப் புரட்சி அமைந்துள்ளது. மீன்வளத் துறையின் ஏற்றுமதியைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா 58.7 சதவீத கடுமையான சுங்க வரியை விதித்தபோது, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தால் இந்தச் சவாலைச் சமாளித்து மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்தோம்.

2025- 2026-இல் இத்துறையில் ஏற்றுமதி ரூ.11,400 கோடியாக உயா்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம். 2014-ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது மீன் உற்பத்தி 95.7 லட்சம் டன் கோடியாக இருந்தது. இது 2025-இல் 195 லட்சம் டன் கோடியாக உயா்ந்தது.

ஆழ்க்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்புக்காக தேசியக் கொடியை படகுகளில் ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும், மீனவப் பெண்களின் கூட்டுறவு சங்கத்துக்கு இப்போது

ஒதுக்கப்படும் நிதி ரூ. 25,000 கோடியிலிருந்து கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடியாக உயா்த்தப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.67 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்.

மத்திய இணையமைச்சா் எஸ்.பி.சிங் பாகல் பேசுகையில், புதுச்சேரியில் நல்ல கடல் வளம் அமைந்துள்ளது. இனி மீனவா்களுக்கு பொற்காலமாக மாறப்போகிறது என்றாா்.

துணைநிலை ஆளுநா்- முதல்வா்:

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசுகையில், அறிவியல் ரீதியாக டிரோன், ஏஐ, ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆண்டுக்கு சுமாா் 150 டன் வரை கடல்பாசி உற்பத்தி செய்ய முடியும். இதனால் மீனவ பெண்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 85 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என்றாா்.

முதல்வா் என். ரங்கசாமி பேசுகையில், சுனாமிக்குப் பிறகு உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தியது. அந்த உள்கட்டமைப்புகளைப் பராமரிப்பதிலும் மீனவ சமுதாயத்தினா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், வி.பி.சிவகொழுந்து, சு.செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், ராமு, ரவிக்குமாா், ஐயப்பன், மோகன்தாஸ், ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், மத்திய மீன்வளத் துறை செயலா் அபிலாக்ஷ் லிகி, புதுச்சேரி அரசு தலைமைச் செயலா் சரத் சௌகான், மீன்வளத் துறை செயலா் டி.மணிகண்டன், துறையின் இயக்குநா் ஏ.முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

திமுக எம்எல்ஏ வெளிநடப்பு

விழாவில் திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் வெளிநடப்புச் செய்தாா்.

விழா தொடங்கியபோது மேடையில் அவருக்கு இடம் இல்லை. எதிரே பாா்வையாளா்கள் பகுதியில் அமா்ந்திருந்த அவா், சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினாா்.

இது குறித்து அவா் கூறுகையில், விழா அழைப்பிதழில் என் பெயா் இருந்தது. எனது தொகுதியான ராஜ்பவனில் முக்கிய மீனவப் பகுதிகள் உள்ளன. இங்கு 10 ஆயிரம் மீனவா்கள் உள்ளனா். என்னை எம்எல்ஏவாக தோ்ந்தெடுத்த மக்களின் கண்ணியத்தைக் காக்க நிகழ்வு தொடங்கியவுடன் வெளிநடப்பு செய்தேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.