புத்துயிர் பெறுமா விழுப்புரம் மாவட்டக் காவல் துறை?
குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் விழுப்புரம் மாவட்டத்தில், 800 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து புதிய எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை, மாவட்டக் காவல் துறைக்கு புத்துயிர் அளிக்குமா


குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் விழுப்புரம் மாவட்டத்தில், 800 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து புதிய எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை, மாவட்டக் காவல் துறைக்கு புத்துயிர் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில், குற்றச் சம்பவங்களும் பெரிய அளவிலேயே நடந்து வருகின்றன. குறிப்பாக, கொலை, கொள்ளை, வழிப்பறி, சிறையிலிருந்தவாறே கைதிகள் மிரட்டல் விடுப்பது போன்றவை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தொடர்கின்றன. இவை தவிர, அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள் கடத்தல், மதுப் புட்டிகள் தயாரித்து விற்பனை செய்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல் போன்ற சம்பவங்களும் போலீஸாருக்கு சவால் விடுவதாக உள்ளன.
மாவட்டத்தில் 49 காவல் நிலையங்கள், 9 சோதனைச் சாவடிகள், 19 நெடுஞ்சாலை ரோந்து உள்ளிட்ட பிரிவுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றினாலும், குற்றச் சம்பவங்கள் கட்டுக்குள் வந்தபாடில்லை.
ஒருபுறம் குற்றச் சம்பவங்களைக் குறைக்க உயரதிகாரிகள் திட்டம் தீட்டினாலும், அதனைச் செயல்படுத்தும் நிலையில் உள்ள போலீஸார் சுணக்கம் காட்டுவதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களுக்கு உதவுவதால் குற்றங்களைக் கட்டுப்படுத்த இயலாததுடன், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் பின்னடவையே ஏற்படுத்துகின்றன.
புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு: இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்ணிப்பாளராக கடந்த மே 5-இல் பொறுப்பேற்ற ஜெயக்குமார், மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் துணைக் கண்காணிப்பாளராகவும் வட சென்னை பகுதியில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ள இவர், அந்த அனுபவங்களைக் கொண்டு உத்வேகத்துடன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப, தான் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே 8 டிஎஸ்பிகள், 27 காவல் ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸாரை ஒருங்கிணைத்து மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் அதிரடியாக அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 46 ரௌடிகள் உள்பட 207 பேர் கைது செய்யப்பட்டனர்.
புத்துயிர் பெறுமா? மேலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டும் போலீஸாரை களையெடுக்கும் விதமான நடவடிக்கையிலும் எஸ்.பி. கவனம் செலுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த வியாழக்கிழமை மது விலக்குப் பிரிவுக்கு புதிதாக 107 தலைமைக் காவலர்களை நியமித்தும், அங்கிருந்த 82 தலைமைக் காவலர்களை பிற காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்தும் எஸ்.பி. நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 457 போலீஸாரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கும் மாற்றினார். நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் 54 பேரை காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்தார்.
மொத்தம் 800 போலீஸாரை பணியிட மாற்றம் செய்த, அதுவும் கூண்டோடு ஒரு பிரிவிலிருந்து மாற்றிய எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கை குற்றச் சம்பவங்களைக் குறைக்க உதவுமா? மாவட்டக் காவல் துறை புத்துயிர் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...