அணைகளுக்கு நீர்வரத்து இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை.
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை.
 விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.29) தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி செஞ்சி 12 மி.மீ, திருக்கோவிலூர் 10 மி.மீ, உளுந்தூர்பேட்டை 20 மி.மீ, வானூர் 14 மி.மீ, சங்கராபுரம் 15 மி.மீ, கள்ளக்குறிச்சி 20.6 மி.மீ, மரக்காணம் 58 மி.மீ அளவும் மாவட்டத்தில் மொத்தமாக 174.6 மி.மீ, சராசரியாக 19.40 மி.மீ மழையளவு பதிவாகியிருந்தது.
 புதன்கிழமை காலை முதல் இரவு வரை வழக்கம் போல திண்டிவனம், வானூர் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் இருள் சூழ்ந்து லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. பருவமழை தொடங்கியுள்ளதால், சம்பா சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் பரவலாக தீவிரப்படுத்தியுள்ளனர். பல இடங்களில் முன் கூட்டியே நடவு செய்தும், பாதியளவு பயிர்களாகவும் உள்ளதால், இம்மழை பயனாக அமைந்துள்ளது.
 அணைகளில் நீர் நிலவரம்:
 சாத்தனூர் அணை: விழுப்புரம் மாவட்டத்துக்கு தண்ணீர் ஆதாரமாக உள்ள சாத்தனூர் அணையில் மொத்தமுள்ள 119 அடிக்கு, 117.3 அடி தண்ணீர் உள்ளது. 7,321 மில்லியன் கனஅடி கொள்ளளவுள்ள இந்த அணையில் தற்போது, 6,942 மில்லியன் கனஅடி நீர் இருப்புள்ளது. 127 கனஅடி அளவில் நீர்வரத்துள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர் வெளியேற்றமும் நிறுத்தப்பட்டுள்ளது.
 வீடுர் அணை: விழுப்புரம் அருகேயுள்ள வீடுர் அணையில் 15.6 அடி அளவில் தண்ணீர் உள்ளது. இதன் கொள்ளளவு 32 அடி. இதில், 605 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய இந்த அணையில், தற்போது 45 மில்லியன் கன அடி அளவில் நீர் தேங்கியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்மையால், நீர்வரத்தும் 2 கனஅடி அளவில் உள்ளது. இதனால், நீர் திறக்கப்படவில்லை.
 கோமுகி அணை: சின்னசேலம் அருகே உள்ள கோமுகி அணையில் 43 அடி தண்ணீர் உள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 46 அடி. இதில், மொத்தமுள்ள 560 மில்லியன் கனஅடியில் 453 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த அக்.22- முதல், அணையிலிருந்து 110 கனஅடி பாசனத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 மணிமுக்தா அணை: சங்கராபுரம் அருகே உள்ள மணிமுக்தா அணை மொத்தம் 36 அடி கொள்ளளவு கொண்டதாகும். இதில், தற்போது 28.6 அடி தண்ணீர் உள்ளது. மொத்தமுள்ள 736 மில்லியன் கன அடியில் 291 மில்லியன் கன அடி நீர் தேங்கியுள்ளது. கடந்த அக்.22-முதல் பாசனத்துக்காக 43 கன அடி நீர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த இரண்டு அணைகளுக்கும், நீராதாரமான மலைப்பகுதியில் தற்போது மழையின்மையால், நீர்வரத்தின்றி உள்ளது.
 ஏரிகள் நிலவரம்: விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்டப் பகுதிகளில் 620 ஏரிகளும், மாவட்டத்தையொட்டிய திருவண்ணாமலைப் பகுதியில் 4 ஏரிகளும் என விழுப்புரம் மாவட்ட பாசனத்துக்கு 624 ஏரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், 27 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. 25 ஏரிகள் 75 சதவீதமும், 48 ஏரிகள் 50 சதவீதம் அளவிலும் நிரம்பியுள்ளன. 524 ஏரிகள் குறைந்தளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில், பெரும்பான்மையான ஏரிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com