பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த இரு இளைஞர்கள் கைது

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அழகுக் கலை நிபுணரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அழகுக் கலை நிபுணரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளைத் தெருவைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் மனைவி ஸ்ரீதேவி(35). இவர், அதே பகுதியில் அழகுக் கலை நிலையம் நடத்தி வருகிறார். 
இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது அழகு நிலையத்துக்கு அருகில் கடை வைத்துள்ள சிவக்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கூட்டேரிப்பட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். 
அப்போது, கன்னிகாபுரம் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஸ்ரீதேவி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி தப்பிச் சென்றனர்.
    நகையை இழந்த ஸ்ரீதேவி அந்தப் பகுதியில் பணியில் இருந்த மயிலம் போலீஸாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து, அருகேயுள்ள விக்கிரவாண்டி காவல் நிலையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து  போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் காத்திருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், தலைமைக் காவலர் கண்ணன், காவலர் மணிகண்டன், ஓட்டுநர் குணசேகரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தப்பி வந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். 
அப்போது, கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினர். போலீஸார் அவர்களை விரட்டிச் சென்றனர். தலைமைக் காவலர் கண்ணன் ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்தார்.  இதில் தலைமைக் காவலர் காயமடைந்தார். 
மற்றொருவர், அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மறைந்து கொண்டார். இதையடுத்து, அங்கு வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டை ராஜ், காவலர்கள் ராஜதுரை, ஜெயராஜ், இளையராஜா, சுரேஷ் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த கொள்ளையனை பிடித்தனர். 
 அவர்கள் இருவரையும் மயிலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் ஹரிஸ் (24), ஸ்ரீதர் மகன் தில்லிபாபு(23) என்பது தெரியவந்தது. மேற்கொண்டு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, தலைமைக் காவலர் கண்ணனுக்கு காயம் ஏற்பட்டதுடன், நெஞ்சு வலியும் ஏற்பட்டது. 
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பார்த்து ஆறுதல் கூறினார். 
மேலும், கொள்ளையர்களை பிடித்த போலீஸாரையும் பாராட்டினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com