ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணன் வலியுறுத்தினார். 
Updated on
2 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணன் வலியுறுத்தினார்.
 விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. லட்சுமணன் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் ராஜேந்திரன் (விழுப்புரம்), ஏழுமலை (ஆரணி), எம்எல்ஏ சக்கரபாணி (வானூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.
 கூட்டத்தில், மாவட்டச் செயலாளரான இரா.லட்சுமணன் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாள் வருகிற 24-ஆம் தேதி வருகிறது.
 இந்த பிறந்த நாளை வெகு விமரிசையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அனைத்துக் கிளைக் கழகங்களிலும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணம் பூசி, கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
 ஏப்ரல் மாதம் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
 அதற்கு நாம் தயாராக வேண்டும். எதிர்க்கட்சிகளும், சசிகலா குடும்பத்தாரும் இக்கட்சியை அபகரித்துவிடலாம், ஆட்சியை கலைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். அடுத்த தேர்தலிலும் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று பேசினார். தொடர்ந்து, அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது:
 இந்தாண்டே, நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் போன்ற பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, புதிய உறுப்பினர்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது என்றார்.
 கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிதாஸ், விழுப்புரம் முன்னாள் நகர் மன்றத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராமசரவணன், ஒன்றிச் செயலாளர் பேட்டை முருகன், ராமதாஸ், முத்தமிழ்செல்வன், புண்ணியமூர்த்தி, ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலர் மணவாளன், இலக்கிய அணி நகரச் செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இணைந்த கைகள்
 ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த இரா.லட்சுமணன், ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றார். இதையடுத்து வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதன் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது. அப்போது, ஜெயலலிதா இருந்தபோது, யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டதோ அதனையே தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.
 அணிகள் இணைந்தபோதும், விழுப்புரம் மாவட்டச் செயலாளராக உள்ள இரா.லட்சுமணனும், அமைச்சர் சி.வி.சண்முகமும் கட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்காதது கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இருவரும் பங்கேற்றதுடன் அருகருகே அமர்ந்திருந்தது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com