மருத்துவர்களின் பங்களிப்பால் புதுப்பொலிவு பெறும் அரசு மருத்துவமனை!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பங்களிப்பால், குழந்தைகள் பிரிவு, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக புதுப்பொலிவுடன் உள்ளது. 
மருத்துவர்களின் பங்களிப்பால் புதுப்பொலிவு பெறும் அரசு மருத்துவமனை!
Updated on
1 min read

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பங்களிப்பால், குழந்தைகள் பிரிவு, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக புதுப்பொலிவுடன் உள்ளது. 

விழுப்புரம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலராக மணிமேகலை பொறுப்பேற்ற பிறகு, மருத்துவமனையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவமனை வளாகத்தில் அழகுச் செடிகள் நடப்பட்டன. தூய்மையான பராமரிப்பு, பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமரா போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக குழந்தைகள் பிரிவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மருத்துவர்கள் தங்களால் இயன்ற பணத்தை அளித்தனர். இதன் மூலம் ரூ.45 ஆயிரம் சேர்ந்தது. இதனைக் கொண்டு, குழந்தைகள் பிரிவின் சுவர்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பட்டாம்பூச்சி, கிளி போன்ற பறவைகள், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் பல வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இந்த பிரிவில், உள்ள குளியலறை பகுதியில் தண்ணீர் சுட வைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் இங்கு சிகிச்சைப் பெறும் குழந்தைகள், சுவர் ஓவியங்களைக் கண்டு, புத்துணர்ச்சி அடைகின்றனர். நோய் தரும் வேதனையை மறந்து விளையாடுவதால் விரைவாக குணமடைவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் மணிமேகலை கூறியதாவது: இந்த மருத்துவமனையை மேம்படுத்த அரசு ஒரு புறம் உதவுகிறது. மற்றொரு புறம் மருத்துவர்களும், பணியாளர்களும் இணைந்து தங்களால் இயன்ற பங்களிப்பை செய்கின்றனர். இதன் முதல்கட்டமாக குழந்தைகள் பிரிவை பல்வேறு வசதிகள் கொண்டதாக மாற்றியுள்ளோம். கிழிந்திருந்த படுக்கைகளை சீரமைத்து, படுக்கை உறைகள் வாங்கியுள்ளோம். சுவருக்கு வண்ணம் தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

இதன் பிறகு, குழந்தைகளுக்கான நல் நெறி வாசகங்கள் எழுத உள்ளோம். தொலைக்காட்சி உள்ளதால், டிவிடி பிளேயர் வாங்க உள்ளோம். அது வாங்கியவுடன், குழந்தைகளுக்குப் பிடித்த விடியோக்கள் திரையிடப்படும். மேலும், குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சீசா ஆகியவையும் வாங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு நிதி இல்லை. இதனை தொடர்ந்து, மற்ற பிற பிரிவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம். இதற்கான நிதிகள், உதவிகள் கிடைத்தால் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com