விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இரு தினங்களாக அலைக்கழித்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வழங்கப்பட்ட விளைபொருள்களுக்கு உரிய பணத்தை பட்டுவாடா செய்யாமல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை இரு தினங்களாக அலைக்கழித்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செவ்வாய்க்கிழமை மாலை விற்பனைக் கூட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது, விவசாயிகள் கூறியதாவது: விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விழுப்புரம், காணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் திங்கள் கிழமை உளுந்து, பருத்தி, நெல் உள்ளிட்ட விளைபொருள்களை கொண்டு வந்தனர்.
இதில், உளுந்து, பருத்தி, காராமணி உள்ளிட்ட விளைபொருள்களைக் ஏலம் எடுத்த வியாபாரிகள் சிலர், கொள்முதல் செய்த காணை, கோழிப்பட்டு, மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்த 50 விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்யவில்லை. திங்கள்கிழமை மாலை வரை பணம் தருவதாகக் கூறி வந்த வியாபாரிகள், பணம் தராமல் அனுப்பிவிட்டனர்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை வந்து விளை பொருளுக்கான தொகையை கேட்டு காத்திருந்த நிலையில், விளை பொருளை வழங்கிய மேலும் 50 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் வியாபாரிகள் அலைக்கழித்தனர்.
இதுகுறித்து கேட்டபோது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ரூ.1,000-க்கு ரூ.50 கமிஷன் பெற்றுக்கொண்டு தரகர்கள் மூலம் விவசாயிகளுக்கு பணம் தருகின்றனர்.
இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து முறைகேடாக பணம் பறிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால், தாமதமாகிறது. மேலும், வங்கிக் கணக்கு இல்லாத சிறு விவசாயிகள், முதியவர்கள் இரு தினங்களாக பணம் தராமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
இதையடுத்து, விவசாயிகள் விற்பனைக் கூடம் எதிரே நேருஜி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், மேற்கு காவல் உதவி ஆய்வாளர் மருதப்பன் மற்றும் போலீஸார் விவசாயிகளிடம் பேசி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இதனால், விழுப்புரம்-புதுவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய தொகையை புதன்கிழமை வழங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







