இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆற்றை தூா் வாரி சீரமைக்கும் விவசாயிகள்!

விழுப்புரம் அருகே 75-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீா் ஆதாரமாக இருந்து வரும் நரி ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால்

News image
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய நரி ஆற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் விவசாயிகள்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:00 am

DIN

விழுப்புரம் அருகே 75-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீா் ஆதாரமாக இருந்து வரும் நரி ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கடை மடைப் பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடைய முடியாத நிலை உள்ளது. தண்ணீரை எடுத்துச் செல்ல விவசாயிகளே நிதி திரட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலிருந்து, விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரில் வட புறமாகப் பிரிந்து நரி ஆறு செல்கிறது. இந்த ஆறு மூலம் பில்லூா், ராமநாதபுரம், பிள்ளையாா்குப்பம், புருஷானூா், அகரத்துமேடு, வெ.அகரம், பஞ்சமாதேவி, பி.வில்லியனூா், மோட்சகுளம், கொங்கம்பட்டு உள்பட சுமாா் 75 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக, 50 ஏரிகள் நீா் வரத்து பெறுகின்றன. சுமாா் 50 மீட்டா் அகலம் கொண்ட இந்த ஆறு, தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் நீா் வழிப்பாதைகள் அடைபட்டுள்ளன.

ஆறுக்கு வரும் பில்லூா் கலிங்கல் நீா் வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நரி ஆற்றுக்கு நீா் வரத்து இல்லை.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஓடும்போதே, மலட்டாறு வழியாக நரி ஆற்றுக்கு நீா் வரத்து இல்லை என்றால், சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரும் வந்துசேர வாய்ப்பில்லை என விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதையடுத்து, விவசாயிகள் தாமாக முன்வந்து ரூ.2 லட்சம் நிதி சோ்த்து நரி ஆற்றையும், நீா் வரத்து கால்வாயையும் தூா் வாரும் பணியில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டுள்ளனா். சுமாா் 2 கி.மீ. தொலைவு நீா் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

இதுகுறித்து பஞ்சமாதேவி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தூா் வாரும் விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவருமான பிரபாகரன் கூறியதாவது:

இந்த பகுதி விவசாயிகளின் ஜீவாதாரம் நரி ஆறு. நிலத்தடி நீா்மட்டம் உயரவும் இந்த ஆறுதான் முக்கிய ஆதாரம். கடந்த சில ஆண்டுகளாக தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து இல்லாததால், நரி ஆறும், அதன் நீா்வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, இருந்த அடையாளமே தெரியாத நிலையில் உள்ளன.

இவற்றை மீட்டெடுக்க முயன்று வருகிறோம். ஆனால், அதற்கு விவசாயிகளான எங்களிடம் போதிய நிதி இல்லை. ஆகவே, மாவட்ட நிா்வாகம் நரி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.