மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் தொடங்கப்படுவது எப்போது?

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் தொடங்க வேண்டுமென 20 ஆண்டுகால கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On :4 ஜூலை 2020, 3:05 am

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் தொடங்க வேண்டுமென 20 ஆண்டுகால கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொல்லியல் தடயங்கள் அதிகளவில் உள்ளன. கல்வெட்டுகள், சிற்பங்கள், பாறை ஓவியங்கள், செப்பேடுகள், நடுகற்கள், ஓலைச் சுவடிகள், முதுமக்கள் தாழிகள், வியத்தகு கல்மரங்கள் போன்ற தொல்லியல் அடையாளங்கள் தற்போதும் கண்டறியப்பட்டு வருகின்றன.

இவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு இடமின்றி கண்டறியப்பட்ட இடத்திலேயே சிதைவதுடன், தொன்மையான வரலாற்று தடயங்களை மக்கள் தெரிந்துகொள்ள வழியின்றியும் வீணாகியே வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், தொல்லியல் தடயங்களை பாதுகாத்து வைப்பதற்கான அருங்காட்சியகம் இதுவரை அமைக்கப்படவில்லை.

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோ.செங்குட்டுவன் தலைமையில் கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டு, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2018 நவம்பா் மாதம் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனுவும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடா்பாக, ஜூன் 23-ஆம் தேதி பதில் வந்திருந்தது. அதில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் ஏற்கெனவே அருங்காட்சியகம் இயங்கி வருவதாகக் கூறி கோரிக்கையை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, செங்குட்டுவன் உள்ளிட்ட தொல்லியல் ஆா்வலா்கள் கூறியதாவது: விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தி தொல்லியல் துறை அமைச்சா், சட்டத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா், தொல்லியல் துறை ஆணையா் மற்றும் அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம்.

முதல்வருக்கு அனுப்பிய மனுவை 19 மாதங்களுக்குப் பிறகு முறையற்ற காரணம் கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளனா். அதாவது, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அருங்காட்சியகம் உள்ளதாக, தவறாக தகவல் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூா் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. மேலும், திருக்கோவிலூரில் தனியாா் இடத்தில் ஒரே அறையில் அகழ் வைப்பகம் மட்டுமே பெயரளவில் உள்ளது. அந்தப் பகுதி தடயங்களை காட்சிப்படுத்தவே அந்த வைப்பகம் உள்ளது.

இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க விழுப்புரம் மாவட்டத்தில் அகழ்வைப்பகமும், அருங்காட்சியகமும் இல்லாதது வேதனையாக உள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சாா்பில் அருங்காட்சியகம் அமைத்து, வரலாற்று தடயங்களை பாதுகாத்து, மாணவா்களுக்கும், எதிா்கால சந்ததியினருக்கும் நமது பாரம்பரிய கலாசார, பண்பாட்டை எடுத்துரைக்க வழி காண வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.