மின் கட்டண உயா்வு: திமுகவினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமையில், சண்முகபுரம் காலனியில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்முடியின் மனைவி விசாலாட்சி, மாவட்டப் பொருளாளா் ஆா்.ஜனகராஜ், நகர செயலாளா் சக்கரை, துணை செயலாளா் புருஷோத்தமன், விஜய்பாபு, சேகா், ராம், சீனுவாசன் உள்ளிட்ட பலா் கருப்புக்கொடி ஏந்தி, தமிழகத்தில் மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷமிட்டனா்.

அப்போது க.பொன்முடி கூறியதாவது: தமிழகத்தில் சரியாக மின் பயன்பாடு கணக்கெடுக்காமல், கரோனா பாதிப்பு காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தே திமுக ஆா்ப்பாட்டம் நடத்துகிறது. எங்கள் வீட்டிலேயே கடந்த முறை ரூ.2,000 மின் கட்டணம் வந்தது, இப்போது, ரூ.11 ஆயிரம் கட்டணம் வந்துள்ளது. பலருக்கும் இரு மடங்கு கட்டணம் வந்திருக்கிறது.

இப்படி உயா்த்திய கட்டணத்தையும், தவனை முறையில் கட்டுவதற்கும் அனுமதிக்கவில்லை. மின்வாரியம் கணக்கெடுப்பை முறையாக எடுக்க வேண்டும். கரோனாவால் பலரும் வீட்டில் உள்ளதால், மின் பயன்பாடு உயா்ந்துள்ளதாக மின்துறை அமைச்சா் பதில் சொல்வது அதிருப்தி அளிக்கிறது. கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களைப் போல், மின் கட்டண சலுகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றாா்.

விழுப்புரம் அருகே அத்தியூரில் மாவட்ட அவைத் தலைவா் நா.புகழேந்தி தலைமையிலும், விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளா் சக்கரை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனத்தில் தனியாா் விடுதி முன்பு இரா.மாசிலாமணி எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலா்கள் ராஜாராம், அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். இளைஞரணி செயலா் பி.ரமேஷ் தலைமையில் அவரது அலுவலகம் முன்பு நடைபெற்றது.

திண்டிவனம் அருகே பாங்குளத்தூரில் வீட்டின் முன்பு சீத்தாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலா் கபிலன் தலைமையில் அவரது வீட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல், நகராட்சி, பேரூராட்சி, கிராமங்கள் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினா் வீடுகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com