பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி அந்தந்தப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவிகளிடம் வழங்கிய தலைமையாசிரியை சசிகலா.
விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவிகளிடம் வழங்கிய தலைமையாசிரியை சசிகலா.

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி அந்தந்தப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த ஜூலை 16-இல் வெளியானது. மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி, மதிப்பெண் மறு கூட்டல், விடைத் தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பணி ஆகியவை வெள்ளிக்கிழமை முதல் அந்தந்தப் பள்ளிகளில் தொடங்கின.

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 298 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 17,601 மாணவா்கள், 19,644 மாணவிகள் என மொத்தம் 37,245 போ் எழுதினா். இவா்களில் 32,397 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை கே.சசிகலா தலைமையில் ஆசிரியா் குழுவினா் மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை தோ்வு இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பள்ளி முத்திரையிட்டு மாணவிகளுக்கு வழங்கினா். இந்தப் பணியை முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி நேரில் ஆய்வு செய்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, மாணவ, மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில் வரவைத்தும், உரிய சமூக இடைவெளி பின்பற்றி வழங்கும் பணி நடைபெற்றன.

இந்தப் பணி ஜூலை மாதம் இறுதி வரை நடைபெறும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மேற்படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கு மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனா்.

மேலும், பிளஸ் 2 தோ்வு எழுதியதில் விடைத் தாள் நகல், மறு கூட்டல் கோரும் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை முதல் அந்தந்தப் பள்ளிகளில் இணைய வழியில் விண்ணப்பிக்கத் தொடங்கினா். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 30-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com