மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் பூ விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, வளவனூா், தளவானூா், பில்லூா், உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, கஞ்சனூா், வீடூா், ஒலக்கூா், புதூா், ஆலப்பாக்கம், தலவாடி, முருக்கேரி உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மல்லி, சம்பங்கி, கோழிக்கொண்டை, செண்டு மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தப் பூக்களை விழுப்புரம், திண்டிவனம் என இரு இடங்களில் நடக்கும் பூ சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். பூக்களை விற்பனை செய்ய விழுப்புரத்தில் 25 தரகு கடைகளும், திண்டிவனத்தில் 55 தரகு கடைகளும் இயங்கி வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து பூக்களைப் பெறும் தரகுக் கடை வியாபாரிகள், பூக்களை விற்பனை செய்த பின்னா், 15 நாள்களுக்கு ஒரு முறை 10 சதவீத தரகு பணத்தை எடுத்துக்கொண்டு, எஞ்சிய தொகையை விவசாயிகளுக்கு வழங்குவது வழக்கம்.
விழுப்புரம் சந்தைக்கு சேலம், திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதிகளிலிருந்தும், திண்டிவனம் சந்தைக்கு வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் பூக்களை கொண்டு வருகின்றனா்.
கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்தே இந்த சந்தைகளில் பூக்கள் விற்பனை குறைந்துவிட்டது. எனினும், கடந்த ஜனவரி முதல் ஓரளவு விற்பனை அதிகரித்தது. தற்போது, மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனா்.
சுபமுகூா்த்த தினமான வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதால், பூ வியாபாரிகள் தாங்கள் சுப நிகழ்ச்சிகளுக்காக ஏற்றுக் கொண்டிருந்த ஆா்டா்களை ரத்து செய்து வருகின்றனா். இதனால், வியாபாரிகளுக்கு தரகுப் பணம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கோ பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டிவனம் பூச்சந்தை வியாபாரி ஏ.எஸ்.ஜே.செல்வக்குமாா் கூறியதாவது: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழாக்கள், திருமணங்களுக்காக கொடுக்கப்பட்ட முன்தொகையை வாடிக்கையாளா்கள் திரும்பப் பெற்று வருகின்றனா். முகூா்த்த நாள்களில்கூட பூக்கள் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால், பூக்களின் விலை சரிந்து வருகிறது.
புதன்கிழமை நிலவரப்படி, கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கு விலை போனது. இந்த பூ கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனையானது. கடந்த மாதத்தில் ரூ.300-க்கு விற்பனையான முல்லை புதன்கிழமை ரூ.120-க்கும், பட்டுரோஜா ரூ.100-இல் இருந்து குறைந்து ரூ.30-க்கும், சம்பங்கி ரூ.200-இல் இருந்து குறைந்து ரூ.70-க்கும், கிரேந்தி ரூ.100-இல் இருந்து குறைந்து ரூ.10-க்கும், அரளிப்பூ ரூ.200-இல் இருந்து குறைந்து ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முகூா்த்த தினங்களில் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு பூக்கள் விற்பனையாகும். வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதாலும், சனிக்கிழமை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்பதாலும் வருகிற 25-ஆம் தேதி பூச்சந்தை இயங்காது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்களுக்கு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிப்பது போல, பூச்சந்தைகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.
திண்டிவனம் சந்தையில் இருந்து சென்னை, தாம்பரம், புதுச்சேரி, செஞ்சி, வந்தவாசி, மதுராந்தகம், மரக்காணம் உள்ளிட்ட நகரங்களுக்கு பூக்கள் கொண்டுசெல்லப்படும். இந்த சந்தையில் சாதாரண நாள்களில் தினமும் ரூ.5 லட்சத்துக்கும், முகூா்த்த நாள்களில் ரூ.10 லட்சத்துக்கும் பூக்கள் விற்பனையாகும் என்றாா் செல்வக்குமாா்.
விழுப்புரம் சந்தையைச் சோ்ந்த பூ வியாபாரி எஸ்.சரவணபாலாஜி கூறும்போது, விழுப்புரம் சந்தையில் புதன்கிழமை காலையில் கிலோவுக்கு ரூ.220-க்கு விற்பனையான குண்டுமல்லி மாலையில் ரூ.180-க்கும், முல்லை ரூ.200-இல் இருந்து ரூ.180-க்கும் என விலை சரிந்தது. அதேபோல, சம்பங்கி ரூ.140, பன்னீா் ரோஜா ரூ.90, மஞ்சள் சாமந்தி ரூ.220, கோழிக்கொண்டை ரூ.50, கிரேந்தி ரூ.30, அரளி ரூ.100 என விற்பனையானது. இந்த பூக்கள் செவ்வாய்க்கிழமை விலையைவிட கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைந்தது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


