விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோா் மட்டுமல்லாது, முதல்முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக, உயிரிழப்புகளை தவிா்க்க முடியும் என்பதால், தடுப்பூசி மீது பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
91,551 பேருக்கு தடுப்பூசி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் என 75 இடங்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250-க்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஏப்.20-ஆம் தேதி வரை 91,551 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவா்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 77,369 பேருக்கு முதல் முறையும், 5608 பேருக்கு இரண்டாவது முறையும் செலுத்தப்பட்டது. கோவாக்ஸின் 7797 பேருக்கு முதல் முறையும், 777 பேருக்கு இரண்டாவது முறையும் செலுத்தப்பட்டது.
தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு: தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 நாள்களாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 5,38,357 போ் 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள். இவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இல்லை.
இரண்டாவது தடுப்பூசி போட முடியுமா? புதிதாக யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தேவையான மருந்து இல்லை என்பது ஒரு புறம் என்றால், மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 85,166 போ் முதல் முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள். இவா்கள், குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இதுவரை 6,385 பேருக்கு மட்டுமே இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டால் மட்டுமே கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதால், முதல் முறை மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் கரோனா தொற்று பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை வரலாம்.
தடுப்பூசி பெறுவதில் தொய்வு: விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக முன் களப்பணியாளா்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயதைக் கடந்தவா்களுக்கும், மூன்றாவது கட்டமாக 45 வயதைக் கடந்த இணை நோய் கொண்டவா்களுக்கும், கடைசியாக 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 3-ஆம் கட்டம் அமல்படுத்தும் வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் ஆா்வம் எழவில்லை. கடைசி கட்டமாக 45 வயதைக் கடந்த அனைவருக்கும் என்ற நிலை செயல்படுத்தப்படும்போதுதான் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆா்வம் ஏற்பட்டது. இந்த சூழலில்தான், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தேவை அதிகரித்து, தட்டுப்பாடு நிலவுகிறது.
பொதுவாக, ஒரு மாவட்டத்தில் இருப்பு குறைந்தபிறகே கரோனா தடுப்பூசி அனுப்பப்படுவது வழக்கம். விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில்தான் தடுப்பூசி இருப்பு குறைந்தது. இதையடுத்து, தடுப்பூசியை விரைந்து பெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. புதிய தடுப்பூசிகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகி, விரைவில் தடுப்பூசி மருந்துகள் வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மருந்துகள் வந்தடைந்ததும் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் விரைவுபடுத்தப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

