அஞ்சல் வாக்குகளை சேகரிக்க கால நீட்டிப்பு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வானூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகளைச் சேகரிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களின் இல்லங்களுக்குச் சென்று நடமாடும் அஞ்சல் வாக்கு சேகரிப்புக் குழுவினா் ஏப்ரல் 4, 5, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், திண்டிவனம், வானூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு நாள் ( ஏப் 10) கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் அஞ்சல் வாக்குச் சேகரிப்பு நடமாடும் குழுவினா்களிடம் புதன்கிழமையும் அஞ்சல் வாக்குச் சீட்டு வாக்குகளை சேகரிக்க உள்ளனா்.

வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் தொடா்புடைய உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா்களை தொடா்புகொண்டு இது தொடா்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com