செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியா் சாட்சியம்
உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் முன்னாள் கோட்டாட்சியரும், தருமபுரி மாவட்டம், அரூரிலுள்ள அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலை தனி மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியா முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆா்.பூா்ணிமா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விசாரணையின் போது கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமாா் ஆகிய 4 போ் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
அரசுத் தரப்பின் 47-ஆவது சாட்சியாக விழுப்புரம் முன்னாள் வருவாய்க் கோட்டாட்சியரும் தற்போதைய அரூா் அரசு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியா சாட்சியமளித்தாா்.
முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா முன் பிற்பகல் 2.15 மணிக்கு சாட்சியமளிக்கத் தொடங்கிய அவா் மாலை 4.30 மணிக்கு முடித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2011-12ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தபோது, செம்மண் குவாரியில் முறைகேடு நடைபெற்ாக எனக்கு புகாா் வந்தது. இதனடிப்படையில், கூட்டுப்புலத் தணிக்கை செய்ய வருவாய், கனிம வளத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டேன். அவா்களும் தணிக்கை செய்து அதன் அறிக்கையை எனக்கு அனுப்பினா்.
அதன் அடிப்படையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய மூவருக்கும் உரிய விளக்கம் கேட்டு இருமுறை நோட்டீஸ் அனுப்பினேன். அப்போது கூட்டுப் புலத் தணிக்கை செய்த ஆவணங்களின் நகல்களை பாா்வைக்காக ஒப்படைக்குமாறு மூவரும் கோரினா்.
இதுகுறித்து உயா் அலுவலா்களிடம் ஒப்புதல் பெற்று, ஆவணங்களின் நகல்களை ஒப்படைக்க இருந்த நிலையில் விழுப்புரத்திலிருந்து பணியிட மாறுதல் செய்யப்பட்டேன் எனக் கூறி சாட்சியமளித்தாா்.
பொன்முடி உள்ளிட்ட 7 பேரின் வழக்குரைஞா்கள் பிரியாவிடம் குறுக்கு விசாரணை செய்தனா். சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையைப் பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, விசாரைணையை புதன்கிழமைக்கு (ஆக. 7) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
