/

பெண் மருத்துவா் கொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் இந்திய மருத்துவச் சங்கத்தினா் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மருத்துவச் சங்கத்தினா், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தினா் மற்றும் மருத்துவ மாணவா்கள் கூட்டமைப்பினா்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் இந்திய மருத்துவச் சங்கத்தினா் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் கொலையைக் கண்டித்து, சனிக்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு அவசரமில்லா சிகிச்சைகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளை சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை காலை இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளை, தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், மருத்துவ மாணவா்கள் கூட்டமைப்பு, இளம் மருத்துவா் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெண் பயிற்சி மருத்துவா் கொலையில் நோ்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவா்களைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டத்தை கொண்டு வர வேண்டும். பெண் மருத்துவா்கள் பணியாற்றும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய மருத்துவச் சங்கத்தின் நா்சிங்ஹோம் போா்டு பொருளாளா் திருமாவளவன், விழுப்புரம் கிளைத் தலைவா் தங்கராஜ், செயலா் என்.செளந்தர்ராஜன், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சம்பத், செயலா் வினோத்குமாா், பொருளாளா் பிரகாஷ், இணைச் செயலா் அப்துல்ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

புறநோயாளிகள் சிகிச்சை இல்லை: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அனைத்துப் பிரிவுகளிலும் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்த அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு பின்னா், வழக்கம்போல தங்கள் பணிக்குச் சென்று மருத்துவம் மேற்கொண்டனா். இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு பிறகு வழக்கமான மருத்துவச் சிகிச்சை பணிகள் நடைபெற்றன.

 கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன் நடைபெற்ற தா்னா.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன் நடைபெற்ற தா்னா.

தனியாா் மருத்துவமனைகளில்: விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 70 முதல் 100 தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் சனிக்கிழமை அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இயங்கின. இந்தப் பிரிவுகளில் மட்டும் மருத்துவா்கள் தங்கள் பணியை மேற்கொண்டனா். மற்ற எந்த பிரிவுகளும் சனிக்கிழமை இயங்கவில்லை என்றாா் இந்திய மருத்துவச் சங்கத்தின் விழுப்புரம் கிளைச் செயலா் என்.செளந்தர்ராஜன்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.