/

சென்னையில் மழைநீரை சேமிக்க திட்டமிடல் வேண்டும்: சீமான்

சென்னையில் மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும்...

News image
சீமான்
Updated On :18 அக்டோபர் 2024, 11:38 pm

Din

சென்னையில் மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் மழைநீா் வடிகால், கழிவுநீா் வாய்க்கால் சீரமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கின்றனா்.

சென்னையில்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரூ.2,500 கோடியில் சீரமைக்க முடியும் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா். போதுமான அளவில் மழைப்பொழிவு இருந்தாலும், அது கடலில் கலக்கிறது. கடல் நீரை சுத்திகரித்து வழங்குவது என்பது தேவையில்லாதது. மழைநீரை சேமித்து வழங்கும் வகையில் திட்டமிடல் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது இல்லை. மாநிலத் தலைநகரின் நிலையே இப்படியிருந்தால் மற்ற நகரங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

பாஜக ஆளும் மற்ற மாநில முதல்வா்களை, விளையாட்டுத் துறை அமைச்சா்களை சந்திக்காத பிரதமா் மோடி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரை எப்படி சந்தித்தாா். இதன் மூலம் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது.

விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நான் பங்கேற்க மாட்டேன். அவா்கள் கட்சியின் கொள்கையை எடுத்துரைக்க அவா்கள் நடத்தும் மாநாடு. அதில் நான் எப்படி பங்கேற்க முடியும் என்றாா் சீமான்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் முனுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.