கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்
விழுப்புரத்தில் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஏதுவாக, சாலாமேடு காவலா் குடியிருப்புப் பகுதியில் ரூ.2.63 கோடியில் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கான பணிகள் விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தின் மூலம் புதன்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த சாலாமேடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள்அங்கு திரண்டு, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கக் கூடாது எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பணிகளைத் தடுத்து நிறுத்தியதோடு, நகராட்சி அலுவலா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். மேலும், பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இதன் பின்னா், பணிகள் தொடங்கி நடைபெற்றன.