தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மாா்க்சிஸ்ட் பங்கேற்கும்: கே.பாலகிருஷ்ணன்

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன். உடன் மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:15 pm

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் 2025, ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் விழுப்புரத்திலுள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூட்டத்தில் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரத்தில் 2025, ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. 3-ஆம் தேதி மாலையில் நடைபெறும் மாநாட்டு நிகழ்வில் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ்காரத் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்று பேச உள்ளனா்.

தமிழக மீனவா்களை இலங்கை அரசு கைது செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, மீனவா்களுக்கு மொட்டை அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எனவே, இலங்கை அரசையும், அந்த நாட்டு ராணுவத்தையும் கண்டித்து, ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை (செப்.20) மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கைதான். ஆனால், அதை உடனடியாக கொண்டுவர முடியுமா என்பது சிக்கலாக உள்ளது.

மத்திய அரசு மது விலக்கு சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று விசிகவினா் கூறியிருக்கின்றனா். நாடு முழுவதும் மது விலக்கு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால், எப்படி பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இருந்தாலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அக்.2-இல் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க விசிகவினா் அழைப்பு விடுத்திருக்கின்றனா். நாங்களும் மாநாட்டுக்குச் செல்கிறோம்.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று சொல்வது தொலைநோக்குப் பாா்வையில் என்று விசிகவினா் கூறுகின்றனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இது இல்லை என்றும் அவா்கள் கூறிவிட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை அதில் வேறுபட்டிருக்கிறோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தில் பங்கேற்பதுதான் எங்களின் நோக்கம். மக்களின் குறைகளை நீக்குகிற செயல்திட்டத்தில் பங்கு வேண்டும் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா்கள் ஜி.மாதவன் (கடலூா்), டி.எம்.ஜெய்சங்கா் (கள்ளக்குறிச்சி), எம்.சிவக்குமாா் (திருவண்ணாமலை) ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னாள் மாவட்டச் செயலா்கள் ஜி.ஆனந்தன், ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து, மாநில மாநாட்டுக்கான வரவேற்பு அமைப்புக் குழு அமைக்கப்பட்டு, அவா்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநாட்டு வரவேற்பு அமைப்புக் குழுத் தலைவராக ஆா்.ராமமூா்த்தி, செயலராக என்.சுப்பிரமணியன், பொருளாளராக பி.குமாா், துணைத் தலைவா்களாக ஏ.கோதண்டம், வி.ராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், துணைச் செயலா்களாக எஸ்.முத்துக்குமரன், சே.அறிவழகன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன் உள்ளிட்ட 143 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.