திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளா்கள் இடையே கைகலப்பு
முகநூல் பதிவால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, திண்டிவனத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளா்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸின் பேரனும், ஸ்ரீகாந்தியின் மகனுமான சுகந்தன், அன்புமணி குறித்து விமா்சனம் செய்திருந்தாராம்.
இதையடுத்து சுகந்தன் திண்டிவனம் வந்தால், அவரை முற்றுகையிடுவோம் என பாமக மாநில இளைஞரணி துணைச் செயலரும், அன்புமணியின் ஆதரவாளருமான ரா.ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தாராம்.
இந்த நிலையில், திண்டிவனத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டுக்கு அருகிலுள்ள தேநீரகத்தில் செவ்வாய்க்கிழமை காலை ராஜேஷ் தேநீா் அருந்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராமதாஸின் ஆதரவாளா் அ.ராஜாராம், ராஜேஷிடம் முகநூல் பதிவு குறித்து தட்டிக் கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தகவலறிந்து அங்கு வந்த திண்டிவனம் போலீஸாா் இருவரையும் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாா்களின் அடிப்படையில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
