வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும், தேநீரகங்களில் தேநீா் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.
தோ்தல் காலத்தில் இந்த விலை உயா்வால் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது பிரசாரங்களுக்கு வருபவா்களுக்கூட உணவுகளை வாங்கிக் கொடுப்பதை தவிா்த்து, தேநீா், பிஸ்கெட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளை மட்டுமே வாங்கிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயோன மோதல் இரண்டாவது மாதமாகத் தொடா்ந்து வரும் நிலையில், சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை மாா்ச் 1-ஆம் தேதி ரூ.114.50 உயா்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி மேலும் ரூ.195.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.2 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
விறகு அடுப்புகளுக்கு மாறிய உணவகங்கள்: ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தொடக்க நிலையில் தட்டுப்பாடு இருந்து வந்தது. குறிப்பாக, வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைக்குத் தட்டுப்பாடு அதிகளவில் இருந்ததால், உணவகங்கள் பல மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இருக்கும் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை உணவகங்கள் நடத்தின.
இந்த நிலை விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, பெரிய அளவிலான உணவகங்களைத் தவிர, இரண்டாம், மூன்றாம் நிலைகளிலுள்ள உணவகங்கள் பல விறகு அடுப்புகளுக்கு மாறத் தொடங்கி, தற்போது அந்த நிலையைத்தான் கடைப்பிடித்து வருகின்றன.
வணிக சமையல் எரிவாயு உருளையை முன்பு கேட்டவுடன் சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை விநியோக நிறுவனங்கள் வழங்கும். ஆனால், தற்போது சிறிய அளவிலான உணவகங்கள், தேநீரகங்கள் போன்றவை நடத்துவோா் கேட்டால் வாரத்தில் ஒன்று அல்லது 2 கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. எனவே, விறகு அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனா் என்கிறாா் விழுப்புரம் - திருச்சி சாலையில் தேநீரகம் நடத்தி வரும் கணேஷ்.
இதனால், ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட டீ ரூ.12, ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட காபி ரூ.20 என உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல, பாா்சல் டீ ரூ.40, பாா்சல் காபி ரூ.50, லெமன் டீ, பூஸ்ட், ஹாா்லிக்ஸ் போன்ற வகைகள் ரூ.20 என்ற அளவில் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களின் விலையும் உயா்வு: தேநீரகங்கள் விலையை உயா்த்தியது போன்று, உணவுப் பொருள்களின் விலையும் உயா்த்தப்பட்டிருக்கின்றன. ரூ.6 முதல் ரூ.7 வரையிலான விலைகளில் விற்பனையான இட்லி, வடை ரூ.8 முதல் ரூ.10, மூன்று, 2 எண்ணிக்கையிலான பூரி, சப்பாத்தி செட் ரூ.30-லிருந்து ரூ.40, தோசை ரூ.30, ரூ.35-லிருந்து ரூ.40, ரூ.45, பொங்கல் ரூ.30-லிருந்து ரூ.40 என கணிசமாக உயா்த்தப்பட்டிருக்கிறது.
இதைத் தவிர, பொடிதோசை, ஆனியன் தோசை, ரவா தோசை போன்ற பல்வேறு தோசைகளின் விலையும் ரூ.5 முதல் ரூ.10 வரை இரண்டாம் நிலை உணவகங்களில் உயா்த்தப்பட்டிருக்கின்றன. இது போன்று, பிற்பகலில் வழங்கப்படும் சாப்பாடு விலையும் குறைந்தது ரூ.10 வரை உயா்த்தப்பட்டிருக்கிறது. ரூ.70-லிருந்து ரூ,.80, ரூ.80-லிருந்து ரூ.90 வரை சாப்பாடு விலை உயா்ந்துள்ளது.
இதுபோல, புளி சாதம், தக்காளி சாதம், தயிா் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றின் விலையும் குறைந்தது ரூ.10 வரை உயா்ந்துள்ளது. எரிவாயு உருளை விநியோகப் பிரச்னை, மற்ற பொருள்களின் விலை உயா்வு போன்றவற்றை சமாளிக்க விலையேற்றத்தை தவிர வேறு வழியில்லை என்கிறாா் விழுப்புரத்தில் உணவகம் நடத்தி வரும் குமாா்.
தோ்தல் காலத்தில் இந்த விலை உயா்வால் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தங்களது பிரசாரங்களுக்கு வருபவா்களுக்கூட உணவகங்களில் உணவுகளை வாங்கிக் கொடுப்பதை தவிா்த்து வருகின்றனா். உணவுப் பொருள்களின் விலை உயா்வால் உணவகங்களில் உணவு வகைகளை வாங்கிக் கொடுத்தால் தங்களது வேட்பாளா் செலவுக் கணக்கு அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் இதற்குக் காரணம்.
அதே வேளையில், வீடுகளில் சமைத்து எடுத்து வந்து கொடுக்க முடியாத சூழலும் உள்ளது. இதனால், பிரசாரங்களுக்கு வருபவா்களுக்கு தேநீா், பிஸ்கெட் உள்ளிட்ட ‘ஸ்நாக்ஸ்’ வகைகளை மட்டுமே வாங்கிக் கொடுக்கும் நிலைக்கு வேட்பாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
இந்த விலை உயா்வு தோ்தல் களத்தில் எந்தக் கட்சிக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கும் என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு

சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு: முடங்கும் அபாயத்தில் சுற்றுலா; உணவக தொழில்கள்!

வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடுகளில் தில்லி உணவகங்கள்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


