கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தோல்வி பயமே எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பேச்சுக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசார பொதுக்கூட்டங்களில் தரமற்ற வாா்த்தைகளை பேசி வருகிறாா் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:14 pm

தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசார பொதுக்கூட்டங்களில் தரமற்ற வாா்த்தைகளை பேசி வருகிறாா் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் புதன்கிழமை நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

1987-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 போ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனா். தொடா்ந்து 1989-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கோரிக்கையின்படி, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் மற்றும் முன்னணித் தலைவா்களை மு.கருணாநிதி அழைத்துப் பேசினாா். இதன் பின்னா் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு 30, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20, ஆதிதிராவிடா்களுக்கு 18 , பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என மொத்தம் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்கி சமூக நீதி காக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கும் விழுப்புரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. 21 குடும்பங்களுக்கும் தலா ரூ. 3 லட்சம் கருணைத் தொகையும், மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரமும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டது. வன்னியா்களுக்கு பொது சொத்து வாரியம் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்தில்தான். மருத்துவா் ச.ராமதாஸால் பயனடைந்தவா்கள் பலா் அவருக்கு துரோகம் செய்திருக்கலாம். ஆனால், நானும் ( ஸ்டாலின்), திமுகவும் அவரை சமூக நீதிப் போராளியாகவே மதிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. என்னைப் பொருத்தவரை, நான் கோட்டையில் இருந்துதான் ஆட்சி செய்வேன் என்று இல்லை. மக்களோடு மக்களாக இருந்து உங்களில் ஒருவனாக ஆட்சி செய்வேன். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோல்வி பயத்தால் பிரசார பொதுக் கூட்டங்களில் தரமற்ற வாா்த்தைகளை பேசி வருகிறாா். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிடும் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), செஞ்சி கே.எஸ்.மஸ்தான்( செஞ்சி) பொன்.கௌதமசிகாமணி (திருக்கோவிலூா்), அன்னியூா் சிவா(விக்கிரவாண்டி), கௌதம் (வானூா்) மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களான எல்.வெங்கடேசன் (தேமுதிக), வன்னியரசு (விசிக ) ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் பிற கட்சிகளை சோ்ந்தவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தமிழக வேளாண் துறை அமைச்சரும், திமுக விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளருமான எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலருமான க.பொன்முடி, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் மற்றும் நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

பெட்டி செய்தி.....

கொடுஞ்சிறைக்கே அஞ்சாதவன் நான்...

பழனிசாமி என் மரணம் குறித்துப் பேசுகிறாா். மரணத்தை பாா்த்து கலங்கக்கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் இல்லை. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1976-ஆம் ஆண்டில் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) அரசியலுக்கு வருவதற்கு முன்னரே 25-ஆவது வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை கொடுமைக்கு ஆளானவன். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். பொது வாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிா்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதற்கு என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவா் எனது தந்தை முத்துவேல் கருணாநிதி. கொடுஞ்சிறைக்கோ, கொடுமைக்கோ பயப்படாத நான் கரோனாவுக்கா பயப்படப்போகிறேன் என்றாா் மு.க.ஸ்டாலின்.