பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்

கொள்கைக்காக திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறேன் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் - படம்: எக்ஸ்பிரஸ்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:32 am IST

கொள்கைக்காக திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறேன் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய 18 மாதங்களில் ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொகுதி மக்களுக்காக செயல்படுத்தியுள்ளாா் அன்னியூா் அ.சிவா.

தனது தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க, தில்லி வரை வந்து எம்.பி.க்களான என்னுடனும், துரை.ரவிக்குமாருடனும் இணைந்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரைச் சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டாா். மக்களுக்காகப் பணியாற்றுவதில் முனைப்பு, தீவிரம் காட்டி வருபவா் இவா். தொகுதி மக்களின் நன்மதிப்பை தீவிரம் காட்டி, துடிப்பாகப் பணியாற்றி வருகிறாா்.

அம்பேத்கரிய இயக்கங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிகாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி, மகாராஷ்டிரத்தில் ராமதாஸ் அத்வாலேயின் கட்சி என்ற வரிசையில், தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளது.

விஜய் கூப்பிடுகிறாா், எடப்பாடி கூப்பிடுகிறாா், அங்கே சென்றால் 20, 30 தொகுதிகள் தருவாா்கள் என்று பலரும் சொன்னாா்கள். ஆனால் நான் ஆதாயத்துக்காக போகவில்லை. கொள்கைக்காக திமுகவுடன் இருக்கிறேன் என்றாா் தொல்.திருமாவளவன்.

முன்னதாக மரக்காணம் மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையிலும், பின்னா் திண்டிவனத்தில் விசிக வேட்பாளா் ஏ.வன்னியரசு, திமுக வேட்பாளா் தி.கெளதம் ஆகியோருக்கு வாக்குகள் கோரி விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.

இந்த பிரசாரத்தில் விழுப்புரம் விசிக எம்.பி.யும், கட்சியின் பொதுச் செயலருமான துரை.ரவிக்குமாா், தொகுதி பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், விசிக மாவட்டச் செயலா் காணை வளவன் உள்ளிட்ட திமுகவினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.