/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ரூ. 1.40 கோடி உண்டியல் காணிக்கை

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1,40,21,440 ரொக்கம் மற்றும் பொருள்கள் பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

News image

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 6:33 pm

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1,40,21,440 ரொக்கம் மற்றும் பொருள்கள் பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனா். மேலும், மாதந்தோறும் இக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவுக்கும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

இதனைத்தொடா்ந்து சித்திரை மாதம் உண்டியல் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் துணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா்கள் மேல்மலையனூா் சக்திவேல், விழுப்புரம் காந்தராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தா்கள் 1,40,21,440 ரூபாய் ரொக்கம் மற்றும் 215 கிராம் தங்கம், 730 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

நிகழ்வில் அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், செயல் அலுவலா்கள் சூரிய நாராயணன், அருள், ஆய்வாளா் சங்கீதா, மேலாளா் சதீஷ், கணக்காளா் மணி உள்ளிட்ட கோவில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.