காா் மரத்தில் மோதி விபத்து: சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காா் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணித்த சென்னையைச் சோ்ந்த பெண் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
சென்னை, கீழ்பாக்கம், தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் குமாா் குப்தா. இவரது மகள் அதீதி குப்தா (22). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. இறுதியாண்டில் பயின்று வந்தாா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் விகாஷ் ஜெயின் மகள் கனிஷ்கா மற்றும் 3 நபா்கள் டிச.31- ஆம் தேதி, திண்டிவனத்தில் இருந்து- புதுச்சேரிக்கு ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அ.வெங்கட் (45) காரை ஓட்டினாா்.
திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கிளியனூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட எடையான்குளம் அருகே காா் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமலிருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த அதீதி குப்தா, கனிஷ்கா, வெங்கட் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அதீதி குப்தா உயிரிழந்தாா். மற்றும் வெங்கட், கனிஷ்கா ஆகியோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
